1970ஆம் ஆண்டுகளில் சிறப்பான நிலையில் கொடிகட்டிப் பறந்தது எமது மாகாணக் கூட்டுறவுத்துறை, தற்போது பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது – கௌரவ ஆளுநர்

அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளைப் பயன்படுத்தி, உங்கள் ஆர்வத்தையும் முயற்சியையும் மூலதனமாக்கி எவ்வாறு சிறப்பாகச் செயற்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே, எதிர்காலத்தில் உங்களுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதற்கான தீர்மானங்கள் அமையும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் நெல் சுத்தப்படுத்தும் மற்றும் தரம் பிரிக்கும் இயந்திரத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (14.03.2026) நடைபெற்றது. வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தால், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியீட்டத்தின் கீழ் 8 மில்லியன் ரூபா செலவில் இந்த இயந்திரம் சங்கத்திற்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய ஆளுநர், கூட்டுறவுத்துறைக்கு உதவ வேண்டும் என்ற தமது எண்ணம் ஒருகட்டத்தில் அருகிவிட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் தாம் பல்வேறு அமைப்புகளின் ஊடாகக் கூட்டுறவுத்துறைக்கு உதவிகளைப் பெற்று வழங்கியிருந்த போதிலும், அவை முகாமைத்துவக் குறைபாடுகளால் திறம்படப் பயன்படுத்தப்படாமையால் கூட்டுறவுத்துறை மீது தமக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்ததாகத் தெரிவித்தார். 1970ஆம் ஆண்டுகளில் இலங்கையிலேயே மிகவும் சிறப்பான நிலையில் கொடிகட்டிப் பறந்தது எமது மாகாணக் கூட்டுறவுத்துறைதான் எனவும், எனினும் சில சங்கங்களின் நிர்வாகங்கள் நேர்மையாகச் செயற்படாமையினாலேயே அத்துறை பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருந்தபோதிலும், இன்றைய நிகழ்வுக்குத் தன்னை அழைத்த மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், இந்தச் சங்கம் மிகவும் திறம்பட இயங்குவதாகத் தன்னிடம் தெரிவித்ததாகவும், அதனை நேரில் பார்வையிடும்போது அவர்களின் சிறப்பான செயற்பாடுகள் உண்மையிலேயே பாராட்டுக்குரியவை எனவும் ஆளுநர் தெரிவித்தார். உங்களின் இந்த முயற்சியும், ஆர்வமுமே உங்களை அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்த்தும் எனத் தெரிவித்த அவர், கூட்டுறவுத்துறை திறம்பட இயங்கினால் விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்காலத்தில் மாகாணத்தின் ஊடான திட்டங்களை மானியமாகவோ அல்லது கொடையாகவோ வழங்க முடியாத நிலை காணப்படுவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். நிதி ஆணைக்குழுவின் புதிய அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த நடைமுறை இருந்தாலும், ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணம் போரினால் பாதிக்கப்பட்டு முற்றிலும் வேறுபட்ட சூழலைக் கொண்டுள்ளது என்பதால், எமது நியாயப்பாடுகளை முன்வைத்து சில விசேட திட்டங்களுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள நாம் நிச்சயம் தொடர்ந்தும் முயற்சிப்போம் எனவும் ஆளுநர் உறுதியளித்தார்.

இந்த விசேட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர், மாவட்டக் கூட்டுறவு உதவி ஆணையாளர், குறித்த சங்கத்தின் தலைவர், நெறியாளர் குழு உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.