வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மீள்குடியேற்ற வீட்டுத் திட்டத்தின் கீழ், இந்த வருடம் 2,726 மில்லியன் ரூபா செலவில் 1,363 புதிய வீடுகளை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அடுத்த 6 மாதங்களுக்குள் இவ்வீட்டுத் திட்டத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும் என வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் கௌரவ அமைச்சர் சுசில் ரணசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய மீள்குடியேற்ற வீட்டுத் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், இன்று புதன்கிழமை (11.02.2026) மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 7,306 வீடுகள் தேவையுள்ள நிலையில், 2026ஆம் ஆண்டு முதற்கட்டமாக 1,363 வீடுகளை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு தலா 2 மில்லியன் ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய வீடுகளை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் நிர்மாணித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில், 2019ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையால் ஆரம்பிக்கப்பட்டு, பாதியில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்கள் குறித்தும் ஆளுநர் மற்றும் மாவட்டச் செயலர்கள் அமைச்சர்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். இது தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அதற்கான விசேட தீர்வைப் பெற்றுத் தருவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மீள்குடியேற்ற வீட்டுத்திட்டத்துக்குரிய பயனாளிகள் பட்டியல் அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குள் இறுதி செய்யப்பட்டு, பகிரங்கமாகக் காட்சிப்படுத்தப்பட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது. திட்டத்திற்கான மூலப் பொருட்கள் மற்றும் வேலையாட்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்களைக் கருத்தில் கொண்டு, மிக இறுக்கமான கண்காணிப்புடன் 6 மாத காலப்பகுதிக்குள் வீடுகளைப் பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் சுசில் ரணசிங்க பணிப்புரை வழங்கினார்.

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளில், குறிப்பாக நெடுந்தீவில் அமைக்கப்படும் வீடுகளுக்கு மூலப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு அதிகம் என்பதால், அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கை தொடர்பில் சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கின் 5 மாவட்டச் செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.