தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் (National Cadet Corps) 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை (18.01.2026) யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.கே.பிரேமதிலக தலைமையில் நேற்று சனிக்கிழமை மதியம் ஆரம்பமான இப்போட்டிகளின் தொடர்ச்சியாக, இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகள் ஆளுநர் தலைமையில் நடைபெற்றன.
விளையாட்டரங்குக்கு வருகை தந்த ஆளுநரை, தேசிய மாணவர் படையணியின் அதிகாரிகள் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பார்வையிட்டார்.
மாணவர் படையணியின் விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் இதன்போது நடைபெற்றன.
இந்நிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் உயர் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.








