ஜனாதிபதியின் அர்ப்பணிப்புடன் போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் கைகோர்ப்போம்!” – யாழ்ப்பாணத்தில் ஆளுநர் அழைப்பு

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன், உயிர்கொல்லி போதைப்பொருளை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அனைவரும் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாவட்டச் செயற்பாட்டுக் குழுவை உருவாக்குவதுக்கான யாழ்ப்பாண மாவட்டக் கலந்துரையாடல், யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று புதன் கிழமை (14.01.2026) மாலை நடைபெற்றது.

யாழ். மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் தனது வரவேற்புரையில், யாழ். மாவட்டத்தில் உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இதுவரையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அது சார்ந்த புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருளை ஒழிக்காமல் எமது எதிர்காலச் சந்ததியின் வாழ்வு சிறப்பாக அமையாது. எனவே, அனைவரும் ஒன்றிணைந்து இதனை ஒழிப்போம், எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜயபால, யாழ். மாவட்டம் போதைப்பொருள் பாவனையற்ற ஒரு முன்மாதிரி மாவட்டமாக மாறுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும், எனக் கேட்டுக்கொண்டார்.

அதன் பின்னர் உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான இ.சந்திரசேகர், யாழ்ப்பாணத்தை மீட்டெடுக்கும் இந்த வேலைத்திட்டம் மிக முக்கியமானது. இதில் அனைவரும் கைகோர்த்துச் செயற்பட வேண்டும், என வலியுறுத்தினார்.

இதன் பின்னர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடனான திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்ன, வடக்கு மாகாண சிரேஷ;ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அதிகாரிகள், பாதுகாப்புத் தரப்பினர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), விவசாய அமைச்சின் செயலாளர், மதத் தலைவர்கள், சமூகமட்டப் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.