நிதிப் பயன்பாட்டில் 98% இலக்கை எட்டி தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் முதலிடம்!” – 2026 ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்ப நிகழ்வில் பெருமிதம்

2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைத் வினைத்திறனாகச் செலவு செய்து, இலங்கையின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கு மாகாண சபை முதலிடத்தைப் பிடித்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர்.சிவரூபன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுடனான 2026ஆம் ஆண்டுக்கான கடமை ஆரம்பிக்கும் விசேட நிகழ்வு, ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (01.01.2026) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்த ஆளுநர், 2025ஆம் ஆண்டில் மாகாணத்தின் நிதி முன்னேற்றத்தில் மிகச் சிறப்பான நிலையை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், கடந்த 2024ஆம் ஆண்டு எமது மாகாணத்துக்கு 4 பில்லியன் ரூபாவும், 2025ஆம் ஆண்டு 8 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 2026ஆம் ஆண்டுக்காக அண்ணளவாக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி ஆணைக்குழுவும் ஜனவரி மாதத்திலிருந்தே எமது திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாகச் செயற்படுத்த முடியாத மேலதிகத் திட்டங்களுக்குரிய நிதியை, மத்திய அரசின் நிரல் அமைச்சுக்களிடம் கோருவதற்கு எமக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, மாகாண சபைகளுக்கு நிரல் அமைச்சுக்களின் நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களும் பணிப்புரை விடுத்துள்ளார். எனவே, இவ்வாண்டில் எம்மால் முன்னரை விடக் கூடுதலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன்.

எமது மாகாணத்தில் சில குறிப்பிட்ட பிரதேசங்கள்த் தொடர்ச்சியாக வெள்ளப் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றன. அந்த மக்கள் ஒவ்வொரு தடவையும் பாதிக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எனவே, அவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசங்களில் எதிர்காலத்தில் வெள்ளப் பாதிப்பை முற்றாக இல்லாதொழிப்பது அல்லது குறைப்பது எவ்வாறு என்பது தொடர்பில் இவ்வாண்டில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சொல்வது சுலபம்; ஆனால், அதனைச் நடைமுறைப்படுத்துவது கடினம். நாம் இங்கிருந்து கொள்கைகளை வகுத்தாலும், அதனைத் களத்தில் செயற்படுத்துபவர்கள் நீங்களே. அந்தச் செயற்பாடுகளின்போது நீங்கள் பெற்ற அனுபவங்களே எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும்.

பிரதம செயலாளர் முதல் கள உத்தியோகத்தர்கள் வரை அனைவரினதும் கூட்டு முயற்சியாலேயே இம்முறை எம்மால் நிதிப் பயன்பாட்டில் தேசிய ரீதியில் சிறப்பான அடைவை எட்ட முடிந்துள்ளது. இருப்பினும், நாம் வெறும் நிதிப் புள்ளிவிவரங்களை மட்டும் பார்க்காமல், இத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதை நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும், என்றார் ஆளுநர்.

பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) ஆர்.சிவரூபன் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் நூறு சதவீதக் கட்டு நிதியையும் நாம் திறைசேரியிடமிருந்து பெற்றுள்ளோம். கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு வரையில் 98 சதவீதத்துக்கும் அதிகமான நிதியைச் செலவு செய்துள்ளோம். பௌதீக முன்னேற்றத்தைப் பொறுத்தவரையில் நாம் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளோம். இந்த அடைவின் மூலம் இலங்கையிலுள்ள ஏனைய மாகாணங்களில் நாமே முன்னிலையில் உள்ளோம். இந்த வெற்றியைத் தக்கவைக்க, 2026ஆம் ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களில் கொள்வனவு தொடர்பான பணிகளை ஆரம்பத்திலேயே தொடங்குவது சிறப்பாக அமையும், என்றார்.

பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் அவர்கள் கருத்துரைக்கையில், வடக்கு மாகாணம் இம்முறை ‘பூச்சிய வரவு – செலவுத் திட்டம்’ என்ற மிகச் சிறப்பான நிதி முகாமைத்துவ நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையை அடைவதற்குப் பங்களிப்புச் செய்த அனைவருக்கும் நன்றிகள். 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் தொடர்பில் நிதி ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள புதிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, எமது எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுப்போம், என்றார்.

இந்நிகழ்வில் மாகாணத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.