மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் ஊழல் ஒழிப்புக்கு மிக உயர்ந்த முன்னுரிமையை அளித்துச் செயற்படுகின்றது. எனவே, எமது மாகாண அரச பணியிலும் ஊழலுக்குச் சிறிதளவேனும் இடமளிக்கக் கூடாது. – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் தலைமையிலான அரசாங்கம் எதிர்பார்க்கின்ற, மக்கள் நேய அரச சேவையை வழங்குவதற்கு அனைவரும் இப்புத்தாண்டில் அர்ப்பணிப்புடனும் உத்வேகத்துடனும் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (01.01.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆளுநர் செயலகப் பணியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆளுநர் செயலகப் பணியாளர்கள் முன்னிலையில், ஆளுநர் அவர்கள் தேசியக் கொடியையும், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மாகாணக் கொடியையும் ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அரச உத்தியோகத்தர்களின் 2026ஆம் ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு ஆளுநர் ஆற்றிய உரையில் கூறியதாவது,

அரச அலுவலகங்கள் இயங்குவதே பொதுமக்களுக்கான சேவைகளை வழங்குவதற்குத்தான் என்பதை நாம் ஒவ்வொரு கணமும் நினைவில் கொள்ள வேண்டும். மக்கள் நம் மீது முழுமையான நம்பிக்கை வைக்கும் அளவுக்கு அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டும். உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவருக்கு எத்தகைய அக்கறையுடன் சேவையை வழங்குவீர்களோ, அதே அளவு முன்னுரிமையையும் மரியாதையையும் உங்களைத் தேடி வரும் அறிமுகமற்ற பொதுமக்களுக்கும் நீங்கள் வழங்க வேண்டும்.

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலான அரசாங்கம் ஊழல் ஒழிப்புக்கு மிக உயர்ந்த முன்னுரிமையை அளித்துச் செயற்படுகின்றது. எனவே, எமது மாகாண அரச பணியிலும் ஊழலுக்குச் சிறிதளவேனும் இடமளிக்கக் கூடாது. ஊழலை இல்லாதொழிப்பதற்கும், மக்களுக்கு மிகவும் விரைவான சேவையை வழங்குவதற்குமே அரசாங்கம் ‘டிஜிட்டல் மயமாக்கல்’ கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றது. பெருகி வரும் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி, மக்களுக்கு எவ்வளவு விரைவாகச் சேவைகளை வழங்க முடியுமோ, அந்தளவு துரிதமாகச் செயற்பட நாம் பழகிக்கொள்ள வேண்டும்.

பணியில் ஏற்படும் சவால்களை நாம் எதிர்கொள்வதன் ஊடாகவே சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். எனவே, சவால்களைக் கண்டு தயங்காது முன்செல்லுங்கள். எந்தவொரு அலுவலகத்திலும் தனித்துச் செயற்படுவதை விட, குழுவாக இணைந்து பணியாற்றுவதன் மூலமே சாதனைகளைப் படைக்க முடியும். அலுவலகத்தில் உள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். அதிகாரத்தை விட, அன்பினால் மட்டுமே பணியாளர்களிடமிருந்து சிறந்த வேலைத்திட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

பிறந்திருக்கின்ற 2026ஆம் ஆண்டு, மக்கள் சேவையுடன் இணைந்த துரித அபிவிருத்திக்குரிய ஆண்டாக அமையவுள்ளது. தற்போது இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு 4.5 சதவீதமாகவே உள்ளது. இதனை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நாம் நிர்ணயிப்போம். அந்த இலக்கை அடைவதற்கு அனைவரும் அயராது உழைப்போம், என ஆளுநர் வலியுறுத்தினார்.