போதைப்பொருள் பாவனை நாட்டில் ஒரு தீவிரமான தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ் நிலையில் இந்தச் சவாலை தேசிய மட்டத்தில் எதிர்கொள்ளும் நோக்கோடு விஷப் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான”முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்ட அங்குரார்பண வைபவம் கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் மகாநாயக்க தேரர்கள், பேராயர்கள், இந்து குருக்கள்கள் மற்றும் மௌலவிகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பரந்த அளவிலான மக்களின் பங்கேற்புடன் 30.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதான இலக்குகளான தடுப்பு, மறுசீரமைப்பு, விழிப்புணர்வு என்பவற்றை வெற்றிகரமாக அடைவதற்கான ஒரு முக்கிய படியாக நாட்டின் அனைத்து மாகாண சபைகள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் இந் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.
அந்த வகையில் இந் நிகழ்விற்கு சமாந்தரமாக பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன் அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் பிரதிப் பிரதம செயலாளர்-நிர்வாகம் திருமதி. எழிலரசி அன்ரன் யோகநாயகம் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் “விஷ போதைப்பொருள் உற்பத்தி, விநியோகம், விற்பனை, ஊக்குவிப்பு மற்றும் அவற்றிற்கு உடந்தையாக இருத்தலை முற்றுமுழுதாக நிராகரிப்போம் என்றும், எதிர்ப்போம் என்றும், அதனுடன் தொடர்பான நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த உதவுவோம் என்றும் உறுதி பூணுகிறோம். அத்துடன், விஷ போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அதிலிருந்து மீள்வதற்கு உதவுவோம் என்றும் அவர்களை மீண்டும் சிறந்ததொரு சமூக வாழ்க்கைக்கு திசைத்திருப்புவதற்கு உதவுவோம் என்றும் உறுதி பூணுகிறோம். “முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய செயற்பாட்டு நிகழ்ச்சித் திட்ட அங்குரார்ப்பண விழாவில் எம்மால் அளிக்கப்படும் இந்த உறுதியுரையை எமது தாய்நாட்டிலிருந்து விஷ போதைப்பொருட்களின் அச்சுறுத்தல் முற்றுமுழுதாக ஒழிக்கப்படும் வரை கைவிடப்படாத தேசியப் பொறுப்பொன்றாக கருதி, செயல்படுவோம் என்றும் உறுதி பூணுகிறோம்.” என உத்தியோகத்தர்கள் அனைவரும் உறுதியுரை எடுத்துக் கொண்டனர்.











