வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் மற்றும் நீர்பாசனப் பொறியியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28.10.2025) நடைபெற்றது.
கால்நடை மருத்துவர்களுடனான சந்திப்பில் முதலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி ஆகியனவற்றுக்கு அடுத்த நிலையில் கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடைகளை நம்பித்தான் பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் உள்ளது. அந்தக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். செய்தவற்றையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்காமல் புத்தாக்கமாக சிந்தித்து அடுத்த ஆண்டு செயற்படவேண்டும். வன்னி போன்ற பிரதேசங்களில் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் அலைந்து திரிந்து சிகிச்சையளிப்பதில் சிரமங்கள் உள்ளன. கால்நடை மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றவேண்டும், என்றார் ஆளுநர்.
இதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டது. ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வாகனப் பிரச்சினை என்பன முன்வைக்கப்பட்டது. அத்துடன் கால்நடைகளுக்கான மருந்து வழங்கலுக்கு மாகாண ரீதியிலான பொறிமுறையை உருவாக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார். அதேபோன்று கால்நடைகளுக்கான மருந்து வழங்கலுக்கு, கால்நடை மருத்துவர்களையும் பொறிமுறையை முன்மொழியுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து மாகாண நீர்பாசனப் பொறியியலாளர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியிலான இந்த ஆண்டுக்குரிய வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் சிறப்பாக உள்ளமைக்காக பொறியியலாளர்களுக்கு பாராட்டுகின்றேன். இதேபோன்று அடுத்த ஆண்டும் மக்கள் மேலதிகமாக பயிர்செய்கை செய்யக் கூடிய வகையில் குளங்களின் புனரமைப்புக்கள் அமையவேண்டும். மேலும், நீர்பாசனத்திணைக்களத்துக்குச் சொந்தமான வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். அதனை நீர்பாசனத் திணைக்களம் புனரமைப்பதில் முரண்பாடுகள் காணப்படுமாயின் வீதி அபிவிருத்தி அதிகார சபை அல்லது உள்ளூராட்சி மன்றத்திடம் அவற்றைக் கையளிக்கலாம். இதேநேரம், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சிலர் இன்னமும் ஒப்பந்த வேலைகளை முன்னெடுப்பதாக மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. அவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது, என்றார் ஆளுநர்.
இதேநேரம், நீர்பாசனப் பொறியியலாளர்கள் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் ஆளுநருக்கு எடுத்துக்கூறினர். இது தொடர்பில் விரைவான தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
இந்தக் கலந்துரையாடல்களில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் ச.சிவஸ்ரீ, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் நீர்பாசனத் திணைக்களம் என்பனவற்றின் மாகாணப் பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.











