மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் சிறுதானிய செய்கை ஊக்குவித்தல் வயல்விழா

2025 ஆம் ஆண்டுக்குரிய மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் யாழ்மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தி ஊக்குவித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தினை செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அறுவடைவிழா நிகழ்வானது திருநெல்வேலி விவசாயப் போதனாசிரியர் பிரிவில் நந்தாவில் கிராமத்தில் 16.09.2025 அன்று காலை 09.00 மணிக்கு தொழில்நுட்ப உதவியாளர் இ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மாகாண விவசாயப்பணிப்பாளர், வட மாகாணம் திருமதி.சுகந்தினி செந்தில்குமரன் கலந்து சிறப்பித்திருந்தார். பிரதி விவசாயப்பணிப்பாளர், பாட விதான உத்தியோகத்தர்கள், கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்திற்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர், அப் பிரதேசத்திற்குரிய கிராமசேவையாளர், விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நந்தாவில் குளத்தின் கீழ் தினை, கம்பு, சாமை என்பன பயிரிடப்பட்டன. தினை செய்கையானது 10 ஏக்கர் விஸ்தீரணத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன. மாகாண குறித்தொகுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 1 ஏக்கர் செய்கையினை மேற்கொண்ட விவசாயிகளுக்கு விதை மற்றும் சேதன உரம் என்பவற்றுக்கு ஏற்படும் செலவிற்கு ரூ15,000 வழங்கப்பட்டுள்ளது. மாகாண விவசாயப்பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் பெறுமதிசேர் உற்பத்தியினை ஊக்குவிக்குமாறு கூறினார். சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேபோன்று தொல்புரம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் தினைச் செய்கை அறுவடை விழா நிகழ்வானது 18.09.2025 அன்று காலை 9.00 மணிக்கு அந்திரான் வாய்க்கால் பகுதியில் விவசாயப் போதனாசிரியர் நா.ஹரிநேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப் போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.