இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் அகதிகள் சர்வதேச விமான நிலையங்களில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸநாயகவுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வு காண்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பிரதியிடப்பட்டு மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு, வடக்கு மாகாண ஆளுநரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாக, போர்க்கால சூழ்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட துறைமுகம் மற்றும் மற்றும் முறையான கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் பெற்ற இலங்கைக் குடியுரிமை உறுதிசெய்யப்பட்ட நபர்கள், தாமாக முன்வந்து நாட்டுக்கு திரும்புவதற்கான குடியேற்ற அனுமதி வசதிகளை வழங்குதல், என்ற தலைப்பில் அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டதாகவும், அமைச்சரவை முடிவின்படி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சால் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.