உலகவங்கிப் பிரதிநிதிகளுடன் ஆளுநர் கலந்துரையாடல்

கௌரவ ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைவாகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு உலக வங்கி தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டு கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் உலக வங்கிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார். அத்துடன் விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திப் பொருட்கள் மூன்றாம் தரப்பு ஊடாக ஏற்றுமதி செய்யப்படுவதால் உற்பத்தியாளர்கள் உரிய இலாபத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டார். சிறு கைத்தொழில்துறை வடக்கில் வளர்ச்சியடைந்து செல்கின்றபோதும் அவர்களுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள் இல்லாமையால் அந்தத் துறையை விரிவாக்க முடியாத நிலைமை இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

உலக வங்கியின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தில் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் போன்று பலவற்றை உருவாக்குவதன் ஊடாக மேலும் விவசாயத்துறையை வலுப்படுத்தலாம் என ஆளுநர் குறிப்பிட்டார்.

இதேவேளை விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பனவற்றை துரிதகதியில் அபிவிருத்தி செய்வதற்கு தனியார் முதலீட்டாளர்களை அனுமதிப்பது சிறப்பாக இருக்கும் எனவும் அதன் ஊடாக அரசாங்கமும் வருமானத்தை ஈட்டலாம் என்றும் சுட்டிக்காட்டிய உலக வங்கிப் பிரதிநிதிகள் இது தனியார் மயமாக்கல் அல்ல எனவும் தெளிவுபடுத்தினர். மேலும், உலக ஒழுங்கு மாற்றத்தால் எதிர்காலத்தில் நன்கொடையூடான திட்டங்கள் முன்னெடுப்பதிலுள்ள சவால்களையும் குறிப்பிட்டனர். அத்துடன் வங்கிகள் ஊடாக கடன்களைப்பெற்று முதலீடுகளை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்புக்களையும் முன்னெடுக்கவேண்டும் என உலக வங்கிப் பிரதிநிதிகள் கோரினர்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள், உலக வங்கி குழுவின் வதிவிடப் பிரதிநிதி விக்டர் அந்தோணிப்பிள்ளை, மாலைதீவு மற்றும் இலங்கைக்கான வதிவிட முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட செயற்பாட்டு அலுவலர் ஸ்றீபன் மசீங், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் செயற்பாட்டு அலுவலர் ருக்சினா குணரட்ன மற்றும் இணைந்த செயற்பாட்டு அலுவலர் மொகமட் கவீஸ் சைநூடீன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.