வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு, வெலிஓயா பௌத்த பேரவை, வெலிஓயா பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச சபை, மகாவலி அதிகார சபை மற்றும் பிரதேச அரச திணைக்களங்கள், பாடசாலைகள், அறநெறிப்பாடசாலைகள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து நடத்திய வடக்கு மாகாண அரச வெசாக் உற்சவம் வெலிஓயா மகாவலி விளையாட்டு மைதானத்தில் 16.05.2025 அன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு வெசாக் அலங்காரங்களுக்கு ஒளியூட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் மைதான நிகழ்வுகள் நடைபெற்றன.
அங்கு உரையாற்றிய ஆளுநர், முல்லைத்தீவு மாவட்டச் செயலராக இருந்தபோது இங்கு பல தடவைகள் வந்திருக்கின்றேன்.
நாம் எமது மாகாணத்தில் அனைத்து மதங்களின் நிகழ்வுகளையும் கொண்டாடுகின்றோம். அதனடிப்படையில் வெசாக் நிகழ்வு இன்று இங்கு கொண்டாடப்படுகின்றது. எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. கௌதம புத்தர் பெருமானும் அன்பைத்தான் போதித்தார். அவர் பரிநிர்வாணம் அடைந்த நாளையே இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்.
இந்த ஊர் மக்கள் அனைவரும் திரண்டு இங்கு வந்து இதைச் செய்வது மகிழ்ச்சியாக இருக்கின்றது. உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ஆகியோரும் பங்கேற்றனர்.