மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் உயிர்த்தரசன்குளம் எனும் பிரதேசத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழான இயந்திர நாற்று நடுகை முறை மூலமான நெல் அறுவடை வயல் விழாவானது 01.04.2025 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.ரமேஸ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி. பிரியதர்சினி றமணேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக உதவி விவசாயப்பணிப்பாளர் திரு.து.மேர்வின் றொசான் றோச் அவர்களும் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாயப்போதனாசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர், கிராம அலுவலர், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர்; கருத்து தெரிவிக்கையில் இவ் உயிர்த்தரசன்குளம் பிரதேசமானது நெற்செய்கைக்கு உகந்த மண்ணை கொண்டிருப்பதனால் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிகளவு விளைச்சலைப் பெற்றுக் கொள்வதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் விவசாய திணைக்களத்தின் உதவியுடன் பல விவசாய ஊக்குவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் இளம் விவசாய கழக உறுப்பினர்கள் இயந்திர நாற்று நடுகை முறை தொடர்பான பயிற்சிகளை பெற்று இனிவரும் காலங்களில் இவ்வாறான இயந்திர நாற்று நடுகை முறை மூலம் நெற்செய்கையை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்குரிய பயிற்சியை வழங்குவதற்கு தாம் ஏற்பாடுகள் செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து கருத்துத் தெரிவித்த உதவி விவசாயப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் குறைந்த செலவில் விவசாயிகள் அதிக வருமானத்தை பெறக்கூடிய பயிர்ச்செய்கை முறைகளை இனங்கண்டு பயிரிடுவதுடன் ஒரு அலகு நிலப்பரப்பில் பெறக்கூடிய விளைச்சலை அதிகரிக்க வேண்டும் எனவும் விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் நவீன தொழில்நுட்பங்களைப் பெற்று சிறப்பான விளைச்சலைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.ரமேஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறான இயந்திர நாற்று நடுகை முறை மூலம் நெற்செய்கை மேற்கொள்ளும் போது வீசிவிதைப்பு முறை மூலமான நெற்செய்கையினை விட குறைந்தளவு விதைநெல் போதுமானது. மற்றும் களைக்கட்டுப்பாடு மேற்கொள்வதற்கான செலவையும் குறைக்க முடியும் எனவும் அத்துடன் இம் முறையின் மூலம் உருவாகும் மட்டங்களின் எண்ணிக்கையும் அதிகம் எனவும் தெரிவித்தார். அத்துடன் வழமையான 01 ஏக்கர் நிலப்பரப்பில் 2 மெற்றித்தொன் ஈர அரிசி விளைச்சல் பெற்றுக் கொண்ட காணியில் இவ்வாறான இயந்திர நாற்று நடுகை முறை மூலம் நெற்செய்கை மேற்கொண்டு 2.6 மெற்றித்தொன் ஈர அரிசி விளைச்சல் பெற்றுக் கொள்ள முடிந்தது எனவும் தெரிவித்தார்.
உயிர்த்தரசன்குளம் மன்னார் எனும் இடத்தைச் சேர்ந்த திரு.அ.அல்ஜீனஸ் எனும் விவசாயி Bg360 எனும் கீரிச்சம்பா இனத்தை 01 ஏக்கர் விஸ்தீரணத்தில் இயந்திர நாற்று நடுகை முறை மூலமாக வெற்றிகரமாக செய்கை மேற்கொண்டிருந்தார். இந் நிகழ்வினை மாதோட்டம் விவசாயப் போதனாசிரியர் திரு.சி.ரமேஸ் சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தார்.