முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் 26.03.2025 அன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டச் செயலர் அ.உமாமகேஸ்வரனின் அழைப்புக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பிரதி அமைச்சர், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவுசெய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தார்.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு தீர்க்கப்பட்ட பிரச்சினைகள், தொடர் நடவடிக்கை எடுக்கப்படுகின்ற பிரச்சினைகள் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. வீதிகள் தொடர்பான விடயங்களும், கனிய மணல் அகழ்வு தொடர்பான விவகாரங்களும், போக்குவரத்துத் தொடர்பான பிரச்சினைகளும் கூடுதலாக இதன்போது ஆராயப்பட்டன.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான கடைகளின் வைப்புப் பணத்தொகை அதிகமாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டபோது அதற்குப் பதிலளித்த கௌரவ ஆளுநர், மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பிரதேச சபைகள் உள்ளன என்றும், அதிகளவு தொகையை அறவிடுவது பொருத்தமற்றது எனவும் குறிப்பிட்டார். அத்துடன் இது தொடர்பில் பல தடவைகள் தான் தெரிவித்துள்ளதாகவும், இவ்வாறு பெற்றுக்கொள்ளும் பணத்தில் மக்களுக்கு அபிவிருத்தியும் செய்வதில்லை எனவும், சபைகளின் நிரந்த வைப்பிலே இடப்படுகின்றன என்றும் ஆளுநர் விசனம் வெளியிட்டார்.
இதன் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் திட்டங்கள், அனுமதி பெறவேண்டிய திட்டங்கள் என்பன சமர்ப்பிக்கப்பட்டன. அனைத்துக்கும் உரிய அனுமதிகள் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது.
விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இறுதியாக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. சட்டவிரோதமாக கசிப்பு காய்ச்சும் நடவடிக்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் பரவலாக முன்னெடுக்கப்படுவதாகவும் 239பேரை இதுவரை அடையாளம் கண்டுள்ளதாகவும் மாவட்டச் செயலர் ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்தார். பொலிஸாரின் ஒத்துழைப்பை அவர் கோரினார்.
இன்றைய கூட்டத்தில் வட்டுவாகல் பாலம் எவ்வாறு திருத்தப்படவுள்ளது என்பது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையால் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் நிலவும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், கடற்றொழில் தொடர்பில் தனியான கலந்துரையாடல் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன், செல்வம் அடைக்கலநாதன், சத்தியலிங்கம், ரவிகரன், காதர் மஸ்தான் ஆகியோரும், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், சமூக அமைப்புக்கள் என்பனவும் கலந்துகொண்டன.