யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடற்றொழில் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25.03.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் அழைப்புக்கு அமைவாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் கலந்துகொண்டார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அமைச்சர் சந்திரசேகரன், அபிவிருத்தித் திட்டங்களை விரைவாக நிறைவுசெய்யுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தார்.
ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் வறுமையான தலா 3 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான முன்மொழிவு முன்வைக்கப்பட்டு சபையின் அனுமதி பெறப்பட்டது.
இதன் பின்னர் கிராமிய வீதிகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது பிரதேச செயலர்களால் வீதிகளின் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா சில விடயங்கள் தொடர்பான தெளிவுபடுத்தலை கௌரவ ஆளுநரிடம் கோரியிருந்த நிலையில் அதற்குரிய விளக்கங்கள் ஆளுநரால் வழங்கப்பட்டன.
மேலும் யாழ். மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் எத்தனை தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன என்ற முன்மொழிவு சபைக்கு முன்வைக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டது. அதேபோல, வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 3 வீதிகளின் திருத்தத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்ட யாழ்ப்பாண நகருக்கான நீண்டகால நோக்கிலான அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், எஸ்.பவானந்தராஜா, ஜெ.ரஜீவன், க.இளங்குமரன், இ.அருச்சுனா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண பிரதம செயலர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.