வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், காணி ஆணையாளர் நாயகம் சந்தனவிடம் கோரிக்கை முன்வைத்தார்.
வடக்கு மாகாண ஆளுநரின் அழைப்பின்பேரில் வருகை தந்துள்ள காணி ஆணையாளர் நாயகம் மற்றும் அவரது குழுவினர் கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடமாடும் சேவையை முன்னெடுத்தனர். இதனைத்தொடர்ந்து மாகாண மட்டத்திலான பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் கிளிநொச்சியிலுள்ள வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன் 21.03.2025 அன்று வெள்ளிக்கிழமைநடைபெற்றது.
இதில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண காணி ஆணையாளர் சோதிநாதன், கடந்த இரண்டு நாள்களில் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின்போது பிரச்சினைக்குரிய காணிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்டு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அரச காணிகளை குத்தகைக்கு வழங்குவதன் ஊடாக 500 மில்லியன் ரூபா வருமானம் இந்த ஆண்டு பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம். மேலும், வடக்கு மாகாணத்தில் 18,273 பேர் காணிகள் இல்லாமல் உள்ளனர். இதனைவிட, வெளிப்படுத்தல் உறுதி மூலமாக சட்டவிரோதமாக காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளும், குளங்களின் நீரேந்துப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளும் வடக்கில் நடைபெறுகின்றன, என்று குறிப்பிட்டார்.
இதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், மக்கள் காணிப் பிரச்சினைக்காக பிரதேச செயலகங்களுக்கும், மாவட்டச் செயலகத்துக்கும் பல தடவைகள் அலைந்து திரிவதாகக் குறிப்பிட்டார். இவ்வாறான நடமாடும் சேவைகள் குறிக்கப்பட்ட காலத்துக்கு ஒரு தடைவ நடைபெறுவது சிறப்பானது என்றும் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் மேலதிக மாவட்டச் செயலர் – காணி க.சிறிமோகன், வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் காணி ஆக்கிரமிப்பால் முதலீட்டாளர்களுக்கு கூட காணி வழங்க முடியாத நிலைமை இருப்பதை தெரியப்படுத்தினார். மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலர்களும் இதே விடயத்தைச் சுட்டிக்காட்டினர். இது தேசிய ரீதியான பிரச்சினை என காணி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். தேசிய ரீதியான பிரச்சினை என்ற போதும் வடக்கு மாகாணமே அதிகமாக இதன் பாதிப்பை எதிர்கொள்வதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், போரால் மக்கள் இடம்பெயர்ந்ததை காரணமாக்கி எந்தவொரு அதிகாரிகளுக்கும் தெரியாமல் வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கான ஒழுங்குகள் செய்யப்படவேண்டும் என காணி ஆணையாளர் நாயகம் பதிலளித்தார்.
மேலும், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் எடுக்கவேண்டிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காணி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.\