மக்களின் நிதிப்பங்களிப்புடன் பிரதேச சபையும் இணைந்து இவ்வாறு சந்தை ஒன்றை அமைத்திருக்கும் செயற்பாடு இலங்கையில் வேறு எங்கும் நடைபெற்றதாக நான் அறியவில்லை. இந்த மக்கள் முன்மாதிரியாகச் செயற்பட்டிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் இதை முன்மாதிரியாகக்கொண்டு ஏனைய இடங்களில் இவ்வாறான அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – கரவெட்டியும், மக்களும் இணைந்த நிதிப்பங்களிப்பில் புனரமைக்கப்பட்ட கோவிற்சந்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு சந்தை வளாகத்தில் 20.03.2025 அன்று வியாழக்கிழமை சபைச் செயலர் க.கம்சநாதன் தலைமையில் இடம்பெற்றது. சபையின் 4 மில்லியன் ரூபா நிதியும், மக்களின் நன்கொடையான 27 மில்லியன் ரூபாவுமாக 31 மில்லியன் ரூபாவில் சந்தை புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், தலைமைத்துவமும், மக்களின் பங்களிப்பும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இந்தச் சந்தை மிகச் சிறந்த உதாரணம்.
சொன்னதை செய்பவர்கள், சொன்னதையும் செய்யாதவர்கள், மக்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்தச் சபையின் செயலர் ஏற்கனவே வேறு பல விடயங்களிலும் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியிருக்கின்றார்.
நான் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் புதிய பல பிரச்சினைகள் மக்களிடமிருந்து எனக்கு வருகின்றன. அரசாங்க நிறுவனங்களுக்கும், தங்களுக்கும் இடையிலான பாலமாக நான் இருக்கவேண்டும் என அந்த மக்கள் கருதுகின்றார்கள். மாவட்டச் செயலராக வடக்கின் 4 மாவட்டங்களில் பணியாற்றியமையால் மக்களை நன்கு தெரியும். அதனால் அவர்கள் அப்படிக் கருதுகின்றார்கள். எங்கள் அதிகாரிகள் மக்களை அலைக்கழித்து, பந்தடிக்கின்றனர். தங்களிடம் வரும் மக்களுக்கு ஒரு விடயத்தை தங்களால், செய்ய முடியாவிடின் மேலதிகாரிகளிடம் கலந்தாலோசிக்கலாம். அதைவிடுத்து மக்களின் கோரிக்கைகளை நிராகரிக்கின்றார்கள்.
பிரதேச சபைகள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிறுவனங்களாக இருக்கின்றன. ஆனால் எங்களின் சபைகளின் சில செயலர்கள், தங்கள் சபையின் வருவாய்களை நிரந்தர வைப்பிலிடுவதிலேயே கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். அந்த நிதியில், வரியைச் செலுத்துகின்றன மக்களுக்கு அபிவிருத்தி செய்வதற்கோ, அவர்களின் குறைகளைப்போக்குவதற்கோ தயாரில்லை.
உங்களின் சபையின் செயலரைப்போன்று துணிவுடன் ஏனைய சபைகளின் செயலர்களும் பணியாற்றவேண்டும். துணிவுடன் பணியாற்றுவதற்கு நேர்மை மிக முக்கியம்.
இன்று பிறருக்கு உதவி செய்பவர்கள் பலனை எதிர்பார்த்துச் செய்ய முற்படுவதால்;தான் பல இடங்களில் பிரச்சினைகள் வருகின்றன. சேவையாக உதவி செய்பவர்கள் அரிது. ஆனால், இந்தக் கட்டடத்துக்கு புலம்பெயர் தேசத்திலிருப்பவர்கள் வழங்கிய நிதிப்பங்களிப்பு மகத்தானது.
நாங்கள் எதையும் குழப்பியடிப்பதில் வல்லவர்கள். ஆக்கபூர்வமாக எதைச் செய்ய முற்பட்டாலும் விமர்சனங்களை முன்வைத்து அதைக் குழப்பிவிடுவார்கள். அதையும்தாண்டி இந்தச் சந்தை இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. மக்கள் பங்களிப்புடன் செய்யும்போது, மக்களுக்கு இது எங்களின் சந்தை என்ற உணர்வு இருக்கும். எனவே அதை நிச்சயம் அவர்களே பாதுகாப்பாக வைத்திருப்பார்கள், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, கரவெட்டி பிரதேச செயலர் உமாமகள் மணிவண்ணன், கோவிற்சந்தை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி கந்தசாமி மகிந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
பிரதேச சபை நன்கொடையாளர்களிடமிருந்து நிதயைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு சட்டரீதியான இடையூறுகள் இருந்த நிலையில், சட்ட அந்தஸ்துள்ளதொரு அமைப்பை உருவாக்கவேண்டும் என்பதற்காக கோயில் சந்தை அபிவிருத்தி கூட்டுறவு சங்கம் என்ற பெயரில் கூட்டுறவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து, கோயில் சந்தை அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் கணக்கினுடாக பெற்று அரச கணக்கு பொறிமுறையினுடாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.