வடக்கு மாகாணத்தில் கடலட்டை தொழிலை முன்னெடுப்பதிலுள்ள இடர்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வுகளும் காணப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் 14.03.2025 அன்று வெள்ளிக்கிழமை கடலட்டை தொழிலை முன்னெடுப்பவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நடைபெற்றது.
‘ஏழை மீனவர் ஒருவர் கலட்டை பண்ணை ஆரம்பிப்பதற்கு விண்ணப்பித்தால் அதற்கு இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. இதுவே வசதிபடைத்த ஒருவர் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி வழங்கப்படுகின்றது. ஏன் ஏழை மீனவர்களை இவ்வாறு அலைக்கழிக்கின்றீர்கள்? ஏழைகளுக்கு ஒரு நடைமுறை, வசதிபடைத்தோருக்கு இன்னொரு நடைமுறையா?’ என ஆளுநர் கூட்டத்தின் ஆரம்பத்தில் திணைக்களத் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
ஆளுநரின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து வடக்கு மாகாண காணி ஆணையாளரால், வடக்கு மாகாணத்தில் எவ்வளவு நிலப்பரப்பில் கடலட்டைப் பண்ணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்ற விவரங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன் பின்னர் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், கடலட்டைப் பண்ணைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் அனுமதியைப்பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இன்னொருவருக்கு பண்ணையைக் கைமாற்றுவது மற்றும் அனுமதியைப்பெற்ற அளவை விட அதிகளவான நிலப்பரப்பில் பண்ணை அமைப்பது என பல்வேறு செயற்பாடுகள் நடைபெறுகின்றன என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இவற்றுக்கு மேலதிகமாக எந்தவொரு திணைக்களத்தினதும் அனுமதியில்லாமலும் கடலட்டைப் பண்ணைகளை சிலர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதனால் குத்தகையும் அறவிட முடியாத நிலைமை இருக்கின்றது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கடலட்டை பண்ணைக்கான அனுமதி வழங்குவதில் மீனவ சங்கங்கள், மீனவர்கள் இடையே முரண்பாடுகள் இருக்கின்றமையும் இதனால் சில இடங்களில் அனுமதிகள் வழங்கப்படுதில் இழுபறி நிலைமை இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேநேரம், தற்போது வடக்கில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளுக்கு 6 மில்லியன் அட்டைக்குஞ்சுகள் தேவையாகவுள்ள நிலையில், நெக்டா நிறுவனத்தால் ஒரு மில்லியன் குஞ்சுகளே உற்பத்தி செய்யக் கூடிய இயலுமை உள்ளமையால், கடலட்டை பண்ணைகளுக்கான புதிய அனுமதிகள் வழங்கப்படுவது தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இதேவேளை, கடலட்டை பண்ணைக்கான அனுமதியுடன் தொடர்புடைய திணைக்களங்களுக்கு இடையிலான தொடர்பாடலின்மையால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக் குறிப்பிட்ட ஆளுநர், அதைச் சீர்செய்யுமாறும் பணிப்புரை விடுத்தார்.
அதேபோன்று திணைக்களங்கள் அனுமதி வழங்கல் மற்றும் அனுமதி புதிப்பித்தல் போன்ற நடவடிக்கைகளை எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என்பன தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், பிரதேச செயலர்கள், யாழ். மாநகர சபை ஆணையாளர், பிரதேச சபைச் செயலர்கள், நெக்டா நிறுவன உதவிப் பணிப்பாளர், கடற்றொழில் நீரியல்வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.