மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த பல்வராயன்கட்டு – வலைப்பாடு பிரதான வீதியைப் புனரமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

மிக நீண்டகாலமாக புனரமைக்கப்படாமலிருந்த கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பல்வராயன்கட்டு – வலைப்பாடு பிரதான வீதியைப் புனரமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 13.03.2025 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான இந்த வீதி, வீதி அபிவிருத்தி அதிகார சபையால் 1,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
கடற்றொழில் கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பாஸ்கரன், வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், பூநகரி பிரதேச செயலர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இங்கு உரையாற்றிய ஆளுநர் அவர்கள், தற்போதைய அரசாங்கம் கிராமப்புறங்களின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்துகின்றது. கௌரவ ஜனாதிபதி அநுரகுமார அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்துக்கு வருகைதந்தபோது, வடக்கு மாகாணத்தில் வீதிகளின் புனரமைப்புக்கு எவ்வளவு நிதி வேண்டும் என்றுதான் கேட்டார்.
அதன் பின்னர் வடக்கு மாகாணத்தில் வீதி அபிவிருத்திக்காக 1,500 கிலோ மீற்றர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு மாத்திரம் 5,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் ஆண்டுகளிலும் எஞ்சிய வீதிகளின் புனரமைப்புக்கு நிதி கிடைக்கும். அந்த நிதிக்கு மேலதிகமாக விசேடமாக இந்த வீதியும், தொண்டைமனாறு – பருத்தித்துறை வரையிலான வீதியும் புனரமைப்புச் செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக வடக்கு மக்களின் சார்பில் கௌரவ ஜனாதிபதி அவர்களுக்கு நான் நன்றிகளைக் கூறுகின்றேன், என்றார்.