மனிதவளம் மற்றும் பௌதீகவளம் என்பன முழுமையாக கிடைத்தால் மாத்திரம் கல்வியில் மேம்பாடு அடைய முடியாது. எல்லோரதும் அர்ப்பணிப்பு முக்கியம். மாணவர்கள் ஆர்வத்துடன், விடாமுயற்சியுடன் கல்வியைக் கற்றால் மாத்திரமே முன்னிலைக்கு வரமுடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரதிபுரம் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்ட இடைநிலை தொழில்நுட்ப ஆய்வுகூடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் 12.03.2025 அன்று புதன் கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கட்டடத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய ஆளுநர் தெரிவித்ததாவது, 2010ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலராக நான் கடமையாற்றிய காலத்தில்தான் இந்தப் பகுதியில் மீள்குடியமர்வு இடம்பெற்றது. 15ஆண்டுகளின் பின்னர் இந்தப் பகுதிக்கு வருவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.
வன்னிப் பிராந்தியத்தில் காணப்படும் ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சின் செயலாளர் கடுமையான நடவடிக்கை எடுத்துவருகின்றார். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஆசிரியர்களை இந்தப் பிரதேசங்களின் ஆசிரியர் தேவையுள்ள இடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் மூலம் உங்கள் பிரதேசங்களின் ஆசிரியர் தேவைப்பாடுகளை முழுமைப்படுத்த முடியும் என நம்புகின்றேன்.
எங்கும் தலைமைத்துவம்தான் எதையும் தீர்மானிக்கின்றது. பாடசாலைகளாக இருக்கலாம், நிறுவனங்களாக இருக்கலாம் எங்கும் தலைமைத்துவம் சிறப்பாக அமையும்போது அவை முன்னேறிச் செல்லும். எனவே மாணவர்களை சிறந்த தலைமைத்துவம் உள்ளவர்களாக வளர்த்தெடுக்கவேண்டும்.
கல்வி என்பது தனியே ஏட்டுக்கல்வி மாத்திரமல்ல. இந்தச் சமூகத்துக்குத் தேவையான விடயங்களையும் கற்றிருப்பதையும்தான் குறிக்கின்றது. இன்று எமது மாணவர் சமூகத்தின் மத்தியில் மற்றவர்களுக்கு உதவும், இரங்கும் பண்புகள் அருகிச் செல்கின்றன. அதைப்போல மூத்தவர்களை மதிக்கும் பண்புகளும் இல்லாமல் செல்கின்றன. அதை இளம் சமுதாயத்திடத்தில் வளர்த்தெடுக்கவேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. அதைச் செய்து எதிர்காலத்தில் சிறப்பான மாணவ சமுதாயத்தை உருவாக்கவேண்டும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.