எமது மாகாணத்துக்கு தென்மாகாணங்களிலிருந்து வரும் சிங்கள ஆசிரியர்களும் இடமாற்றங்களைக் கோருகின்றனர். இதனால் இங்குள்ள மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் இல்லாத நிலைமை நீடிக்கின்றது. எதிர்காலத்தில் இங்கு கற்கும் மாணவர்கள் இந்தப் பிரதேசத்துக்கே ஆசிரியர்களாக வரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வவுனியா தெற்கு கல்வி வலயத்திலுள்ள போகஸ்வெவ மகா வித்தியாலத்தில், மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் 40 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வகுப்பறை, ஆய்வுகூடம் என்பன அடங்கிய கட்டடத் தொகுதி 12.03.2025 அன்று புதன் கிழமை வடக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.
ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டு தேசியக்கொடி, பாடசாலைக்கொடி என்பன ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்டடத்தை திறந்து வைத்த ஆளுநர், வகுப்பறைகளையும் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் இடம்பெற்ற மண்டப நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,
வடக்கு மாகாணத்தில் வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் மாவட்டச் செயலர்களாக இருந்திருக்கின்றேன். இந்தப் பிரதேசத்துக்கு இப்போதுதான் முதல் தடவையாக வந்திருக்கின்றேன். உங்களின் அழைப்புக்கு நன்றியைக் கூறுகின்றேன். பாடசாலையின் அதிபர் தனது உரையில் இரண்டு விடயங்களைக் குறிப்பிட்டிருந்தார். ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் தங்குமிட விடுதி என்பன தொடர்பில் அவர் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
ஆசிரியர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாகவுள்ளது. இந்தப் பகுதிக்கு கற்பிப்பதற்கு தென்மாகாணங்களிலிருந்துதான் ஆசிரியர்கள் வருகின்றார்கள். உங்களுக்கு அயலிலுள்ள பிரதேசங்களிலிருந்து ஆசிரியர்கள் வருகின்றார்களில்லை. யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் வருகை தந்திருந்த கௌரவ பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அம்மையாரிடம், உங்களின் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம். தேசியக் கல்வியற் கல்லூரியிலிருந்து அடுத்து வெளிவரும் ஆசிரியர்களை இங்கு நியமிப்பதாக அவர் உறுதியளித்திருக்கின்றார். அது நடைபெற்றால் உங்களின் ஆசிரியர் பற்றாக்குறை நிறைவுபெற்றுவிடும்.
மேலும், இங்கு வேறு மாகாணங்களிலிருந்து அதுவும் தூர இடங்களிலிருந்து ஆசிரியர்கள் வருவதால் ஆசிரிய விடுதி அவசியமானதுதான். அதனை விரைவில் அமைப்பதற்கு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கல்வி எல்லாவற்றுக்கும் அடிப்படையானது. கல்வியால்தான் ஒரு பிரதேசம் அபிவிருத்தியடைய முடியும். ஆர்வமும், முயற்சியிருந்தால் எதையும் எம்மால் செய்ய முடியும். இங்குள்ள மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைபெற்று எமது மாகாணத்துக்கு பெருமையைப் பெற்றுத்தரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.பிரெட்லி ஜெனட், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.