கிளிநொச்சி மாவட்டத்தில் நான் மாவட்டச் செயலராக இருந்த காலத்தில் இங்கிருந்த பெண்கள் அமைப்புக்கள்தான் பல திட்டங்களை வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் செயற்படுத்தியிருந்தன. நியாப் திட்டத்தின் கீழான கடன் வழங்கலாக இருந்தாலும் சரி எந்தவொரு விடயமாக இருந்தாலும் சரி பெண்கள் தலைமைத்துவத்தை ஆளுமையாக வழங்கி அதைச் செய்திருந்தார்கள். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டார்.
சுதந்திரப் பறவைகள் மகளிர் பேரவையின் பன்னாட்டு மகளிர் தினம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (08.03.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தனது உரையில்,
இன்று பெண்களின் பாதுகாப்பு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கின்றது. வேலைத் தளங்களிலும், பாடசாலைகளிலும், பொதுப்போக்குவரத்திலும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகின்றது. இன்றைய சமூகப்பிறழ்வுகளாலும் அதிகம் பெண்களே பாதிக்கப்படுகின்றார்கள்.
இவற்றை இல்லாமல் செய்யவேண்டும். பெண் உரிமைக்காக குரல் எழுப்புவது மாத்திரமல்ல அதை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். சமத்துவத்துக்காக குரல் கொடுப்பதுடன் நின்றுவிடாது அதை யதார்த்தபூர்வமாக்கவேண்டும். இதுவே இன்றைய பன்னாட்டு மகளிர் தினத்தில் நாம் செய்யக்கூடியதொன்றாக இருக்கும்.
அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உதவிகள் கூட கணவனால் வீட்டுக்கு வழங்கப்படுவதில்லை என பல பெண்கள் முறையிட்டிருக்கின்றார்கள். அவர்கள் குடும்பத்தைக்கூட கவனிக்கின்றார்கள் இல்லை என பல குடும்பப் பெண்கள் என்னிடம் சொல்லியிருக்கின்றார்கள். இதைப்போல அரசாங்கப் பணிகளில் பல தரப்பட்ட இடங்களில் பணிபுரியும் பெண்கள், குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இன்மையால் எதிர்கொள்ளும் இன்னல்களையும் எனக்குச் சொல்லியிருக்கின்றார்கள். இவையெல்லாவற்றையும் மாற்றியமைப்பதற்கு ஒவ்வொருவரும் ஆக்கபூர்வமாகச் சிந்திப்பது மாத்திரமல்லாது நடைமுறைப்படுத்தவேண்டும்.
இவற்றுக்கு அப்பால், வடக்கில் பெண்களுக்கான போதைப்பொருள் புனர்வாழ்வு மையம் அமைக்கப்படவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. அந்தளவுதூரம் நிலைமை இருக்கின்றது. கலாசாரம் சீரழியுமாக இருந்தால் எங்கள் இலக்குகளை நாங்கள் அடைய முடியாமல் போகும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் கௌரவ அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்டச் செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி உதயனி நவரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். சிறப்பான பெண் ஆளுமைக்கான ‘மண்ணின் மாதவம் -2025’ விருதும் இந்த நிகழ்வின்போது ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.