விளையாட்டுச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் ஊடாக சமூகப்பிறழ்வுகளை குறைக்க முடியும் – வடக்கு மாகாண ஆளுநர்

இளையோர் உயிர்கொல்லி போதைப்பொருளை நாடுவதும், சமூகப்பிறழ்வான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை அதிகரித்துச் செல்கின்றமையும் எல்லோருக்கும் தெரியும். இளையோர்களை அந்தச் சிந்தனைகளிலிருந்து விடுவிப்பதற்கு பெரும் பங்காற்றக் கூடியது விளையாட்டுச் செயற்பாடுகள்தான். எனவே, இளையோரிடத்தில் அதை மேம்படுத்தி தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் சாதனைகளை நிலைநாட்ட வேண்டும். அந்த மாற்றத்தை நோக்கி விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய அனைத்து உத்தியோகத்தர்களும் உழைக்கவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக்டிறஞ்சன், வடக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் பா.முகுந்தன், மாவட்ட விளையாட்டுத் திணைக்கள அலுவலர்கள், மாவட்ட விளையாட்டுத்திணைக்கள அபிவிருத்தி அலுவலர்கள், பிரதேச செயலக விளையாட்டு அலுவலர்கள், பயிற்றுவிப்பாளர்களுடனான வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 06.05.2024 அன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், விளையாட்டுச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் ஊடாக சமூகப்பிறழ்வுகளை குறைக்க முடியும். நாம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி அவர்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தவேண்டும். இன்று பாடசாலை மாணவர்கள் ஒன்றில் தனியார் கல்வி நிலையங்களில் அல்லது கைப்பேசிகளுடன்தான் இருக்கின்றார்கள். அவர்களை அதிலிருந்து விடுவித்து விளையாட்டை நோக்கிக் கொண்டு வரவேண்டிய தேவை இருக்கின்றது. இங்குள்ள விளையாட்டுத்துறை சார்ந்த அலுவலர்களில் பெரும்பாலானவர்கள் நீண்டகால அனுபவமிக்கவர்கள். நீங்கள் உங்கள் அனுபவங்களின் வாயிலாக எமது மாகாணத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு உளப்பூர்வமாகப் பணியாற்றவேண்டும்.
கிராமங்களில் அதிகளவான திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள். அவர்களைச் சரியாக அடையாளம் கண்டு பயிற்சிகளை வழங்கி உயர்த்தவேண்டும். 2025ஆம் ஆண்டில் எமது மாகாணத்தில் விளையாட்டுத்துறையில் மாற்றங்கள் தெரியவேண்டும். தேவையான பௌதீக வளங்களைப்பெற்றுத் தருவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம். பெறுபேறுகள் சிறப்பாக அமைவதற்கு நீங்கள் முயற்சிக்கவேண்டும், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
கல்வி அமைச்சின் செயலர் தனது உரையில், எமது மாகாணம் தேசிய ரீதியில் இறுதியிடத்திலேயே இருக்கின்றது. இதை மாற்றியமைக்கவேண்டும். கௌரவ ஆளுநர் குறிப்பிட்டதைப்போல உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையிலிருந்து இளையோரை வழிப்படுத்த விளையாட்டு மிகச் சிறந்த ஆயுதம். உண்மையில் விளையாட்டு மிகச் சிறந்த பொழுதுபோக்கு. பாடசாலை காலங்களில் விளையாடுபவர்கள் பாடசாலைகளிலிருந்து வெளியில் வந்த பின்னர் அதைத் தொடர்வதில்லை. இதை நீங்கள் கவனத்திலெடுக்கவேண்டும். விளையாட்டுக்களில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. அதைத் தொடர அனுமதிக்க முடியாது. மனப்பூர்மான மாற்றம் உங்களிடமிருந்துதான் வரவேண்டும். விளையாட்டுக்களில் திறமையாகச் செயற்பட்டு இந்தப் பதவிக்கு வந்த உங்களுக்கு அந்தப் பொறுப்பு உண்டு. விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் கல்வியில் பின்னடைவைச் சந்திப்பார்கள் என்ற மாயை வடக்கில் இப்போது தகர்த்தெறியப்பட்டிருக்கின்றது. கடந்த காலங்களில் வசதிகள் குறைவாக இருந்தபோது நாம் சாதித்தளவுக்கு இப்போது கிடைக்கின்ற வசதிகளைப் பயன்படுத்தி நாம் சாதிக்கவில்லை என்பதே உண்மை. இந்த ஆண்டு விளையாட்டுத் திணைக்களத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பௌதீக வளங்களைவிட பயிற்சிகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு நிச்சயமாக மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம், என்றார் செயலாளர்.
இதனைத் தொடர்ந்து மாகாணப் பணிப்பாளர் மற்றும் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி அலுவலர்களால் எதிர்காலத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள விடயங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாவட்ட விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டியதன் அவசியம், மாகாண விளையாட்டுத்திடல் அமைக்கவேண்டியதன் அவசியம் என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டது.