நாதஸ்வர வித்துவான் இ.கேதீஸ்வரனின், ‘தமிழர் செவ்வியல் இசையும் நாகசுர தவில் நிகழ்த்துகையும்’ நூல் வெளியீடு 02.03.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.
‘நூலாசிரியர் கேதீஸ்வரன் எனது ஊரவன். அவரும் நானும் ஒரே பாடசாலையில் (தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி) கல்வி பயின்றவர்கள். கலைவித்துவான்கள் பலரையும் கொண்டது எங்கள் அளவெட்டி மண். இடப்பெயர்வால் அவை எல்லாம் சிதறிப்போய்விட்டன. முன்னைய நிலைக்கு இப்போதுதான் மெல்ல மெல்ல ஊர் திரும்பிக்கொண்டிருக்கின்றது. நாதஸ்வர வித்துவான் ஒருவர் அந்தத் துறை சார்ந்து நூல் வெளியிடுவது இதுவே முதல்முறை என்று நினைக்கின்றேன். நாம் பல விடயங்களை மறந்து விடுகின்றோம். வரலாறுகள் தெரியாதவர்களாக இருக்கின்றோம். இவ்வாறான நூல்கள் ஊடாக பல விடயங்கள் ஆவணப்படுத்தப்படுவது வரவேற்கக்கூடியதே’ என்று ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் கோகிலா மகேந்திரன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், திருமதி மனோன்மணி சண்முகதாஸ், முன்னாள் துணைவேந்தர் நா.சண்முகலிங்கன், பேராசிரியர் சி.சிவலிங்கராசா, தமிழருவி த.சிவகுமாரன், கவிஞர் சோ.பத்மநாதன், யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட இசைத்துறைத் தலைவர் தவநாதன் றொபேட், தமிழ்நாட்டைச் சேர்ந்த இசை ஆர்வலர் சரவணன் சுவாமிமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.