அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்மொழிவுகளை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், அதனை அனைத்துத்தரப்புக்களும் இணைந்து முன்கொண்டு செல்லவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பிரதம செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளர் ஆகியோருக்கும், அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் 25.02.2025 அன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில், மாகாண ஆணையாளர் பதவி மற்றும் பிரதி ஆணையாளர் பதவி என்பன அகில இலங்கை ரீதியாக விண்ணப்பம் கோரப்பட்டு ஒளிவுமறைவு இன்றி நேர்முகப்பரீட்சை நடைபெற்று பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இந்தக் கோரிக்கையில் உறுதியாக இருந்தால் அதைச் செயற்படுத்துவதாக பிரதம செயலர் சங்கத்தினருக்கு பதிலளித்தார்.
சிரேஷ்ட சமூக மருத்துவ அதிகாரி, மருத்துவ அத்தியட்சகர் மற்றும் மருத்துவ பொறுப்பதிகாரி நியமனங்கள் தொடர்பிலும் சங்கத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் வருடாந்த இடமாற்றத்தில் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் சங்கப் பிரதிநிதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதுவும் சீர்செய்யப்படும் என பிரதம செயலர் பதிலளித்தார்.
மருத்துவமனைகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவை தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஆளுநர் குறிப்பிட்டார். இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தவிர ஏனைய மாகாணங்களில் மாகாண சித்த மருத்துவத் திணைக்களம் என்றே உள்ள நிலையில் வடக்கு, கிழக்கில் மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்களம் என உள்ளதை மாற்றவேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தனர். இது தொடர்பில் ஆராயலாம் என ஆளுநர் பதிலளித்தார்.
அதேவேளை, அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் முன்னோக்கிய பல முன்மொழிவுகளை ஆளுநர் பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.