இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் ஆளுநருக்கும் இடையிலான கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக ஒப்பந்தகாரர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை (25.02.2025) இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், அதை உரிய காலத்துக்குள் நிறைவு செய்வதுடன், அந்த வேலைகள் உரிய தரத்துடன் இருப்பது அவசியம் எனவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது இலங்கை தேசிய நிர்மாணிகள் சங்கத்தின் வடபிராந்தியக் கிளையினரால் சில விடயங்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டன. மணல் மற்றும் கிரவலைப் பெற்றுக் கொள்வதில் உள்ள இடர்பாடுகளை பிரதானமாக அவர்கள் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப்போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான ‘யாட்’ உருவாக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஆளுநர் அதன் ஊடாக இந்த விடயத்து தீர்வைக் காணலாம் என்றார்.
மேலும் கடந்த காலங்களில் தங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில் தாமதம் நிலவுவதாகவும், கொடுப்பனவுக்கான பொறிமுறை நீண்டதாக இருப்பதாகவும் நிர்மாணிகள் சங்கத்தால் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் குறிப்பிட்டார்.
அபிவிருத்தித்திட்டங்களுக்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளும்போது அரசாங்கத் திணைக்களங்கள் பல விடயங்களைக் கவனத்தில்கொள்வதில்லை எனவும், நடைமுறை பிரச்சினைகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் நிர்மாணிகள் சங்கத்தினர் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர். அதேபோல பல அபிவிருத்திவேலைகளை ஒன்றாக்கி ஒரே கேள்வி கோரலாக அதை வெளியிடும்போது அதனைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிட்டனர். அத்துடன் திணைக்களத் தலைவர்களுடன் நேரடியாக கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
இந்த விடயங்களை கவனத்திலெடுப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், சந்திப்புக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.