மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு ஆளுநர் விஜயம்

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலர் பிரிவு மற்றும் மாந்தைமேற்கு பிரதேச செயலர் பிரிவின் பல கிராமங்களுக்கு புதன்கிழமை 19.02.2025 களப்பயணம் மேற்கொண்டு மக்களுடன் சந்திப்புக்களை நடத்தினார். இதன்போது மக்களால் பல்வேறு விடயங்கள் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மடு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரணைஇலுப்பைக்குளம், கீரிசுட்டான், பாலம்பிட்டி ஆகிய கிராமங்களுக்கு மடு பிரதேச செயலர் கீ.பீட் நிஜாகரனுடன் ஆளுநர் சென்று பார்வையிட்டார். இதன்போது இரணைஇலுப்பைக்குளத்திலுள்ள ஆரம்ப சுகாதார மருத்துவ நிலையத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார். பல் மருத்துவ கிளினிக் அருகில் வேறொரு இடத்தில் இயங்கி வரும் நிலையில் அதனை, ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ள அதே வளாகத்தில் அமைப்பதற்காக கட்டடக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மாகாண சுகாதாரப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்ட ஆளுநர் நடவடிக்கை எடுக்குமாறு பணித்தார்.
அந்தப் பகுதியில் பம்பாய் வெங்காய விதைக்கான பயிர்செய்கை முன்னெடுக்கப்படும் இடத்தையும் ஆளுநர் சென்று பார்வையிட்டார். அந்தக் கிராமத்தில் மேலும் 30 விவசாயிகள் இந்தச் செய்கையை முன்னெடுக்க ஆர்வமாக உள்ளதாக விவசாயப் போதனாசிரியர் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அதற்கு உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்த ஆளுநர், அங்குள்ள விவசாயக் கிணறுகளை புனரமைப்பதற்கும் இணக்கம் தெரிவித்தார்.
அந்தப் பிரதேசத்தில் மேட்டுநில விவசாய நிலங்களுக்கான பிரதான மின்இணைப்புக்கான கோரிக்கையும் ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டது. மேலும், இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளோ, தனியார் பேருந்துகளோ அங்கு சேவையில் ஈடுபடுவதில்லை என்று மக்களால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இதனால் பாடசாலை மாணவர்கள் மாத்திரமல்லாது, பாடசாலைகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வரும் ஆசிரியர்களும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதன் பின்னர் கீரிசுட்டான் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது. இதன்போது பள்ளமடு – மகிழங்குளம் பிரதான வீதியில் முள்ளிக்குளத்திலிருந்து பெரியமடு வரையிலான 21 கிலோ மீற்றர் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட அந்த வீதியையும் ஆளுநர் பார்வையிட்டு அந்த வீதியின் ஊடாகவே பயணத்தையும் மேற்கொண்டார். மேலும் கீரிசுட்டான் குளம் இதுவரை புனரமைக்கப்படவில்லை என்றும் அதைப் புனரமைத்து தருமாறும் மக்கள் கோரினர்.
பாலம்பிட்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், கால்நடைகளுக்கான மேச்சல் தரவையின்மையால் எதிர்கொள்ளும் இடர்களைச் சுட்டிக்காட்டினர். அத்துடன் குளம் மற்றும் வாய்க்கால் புனரமைப்புக்கான கோரிக்கையும் முன்வைத்தனர். வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன விவசாயக் காணிகளுக்குள் எல்லையிட்டுள்ளமையால் எழுந்துள்ள சிக்கல் நிலைமைகளையும் சுட்டிக்காட்டினர். அங்குள்ள ஆலயத்தின் புனரமைப்பு மற்றும் மைதானத்துக்கான வேலி அடைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் ஆளுநரிடம் முன்வைத்தனர்.
இறுதியாக பெரியமடுவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், வடக்கு மாகாணத் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், ஆணையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மகிழங்குளம் – பள்ளமடு பிரதான வீதியில் பெரியமடுவிலிருந்தான வீதி காடுகளால் மூடப்பட்டு உருத்தெரியாமல் போயுள்ளதாக மக்கள் ஆளுநரை நேரடியாக அழைத்துச் சென்று காண்பித்தனர். கூகுள் வரைபடத்தில் அந்த வீதி இருந்தமைக்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டியதுடன் வனவளத் திணைக்களத்திடமிருந்து மீட்டு அந்த வீதியை புனரமைத்து தருவதன் ஊடாக ஏ – 9 வீதியையும், ஏ – 32 வீதியையும் இணைக்க முடியும் எனக் குறிப்பிட்டனர். அதேபோல இராணுவ முகாம் இருந்தமை காரணமாக உள்ளூராட்சி மன்றத்துக்குச் சொந்தமான வீதி பற்றைகள் மூடியுள்ளதாகவும் அதையும் புனரமைத்துத் தரவேண்டும் எனக் கோரினர். இதன் பின்னர் பெரியமடுக்குளத்தை ஆளுநர் சென்று பார்வையிட்டார். அந்தக் குளத்தின் அணைக்கட்டு உயர்த்தப்பட வேண்டும் எனவும் அணைக்கட்டு புனரமைக்கப்பட வேண்டும் எனவும் மக்கள் கோரினர். அத்துடன் நீர்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான விடுதி இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளமையால் அதையும் விடுவித்துத் தரவேண்டும் எனக்கோரினர்.
இதன் பின்னர் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வனவளத்திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தால் ஏற்பட்டுள் பாதிப்புக்கள் தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்டது. குரங்கு மற்றும் யானைத் தாக்கத்திலிருந்து பாதுகாக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், மக்கள் இப்படியான நிலைமையில் இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது. அபிவிருத்தி என்பது கிராமப்புறங்களை நோக்கியதாக இருக்கவேண்டும். இங்கு சொல்லப்பட்ட விடயங்கள் தொடர்பில் எங்களால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றின் பிரச்சினைகள் நாடளாவிய ரீதியில் உள்ளன. அது தொடர்பில் கௌரவ ஜனாதிபதியை நான் நேரில் சந்தித்துப் பேசுவேன். எமது மாகாண அலுவலர்களை இவ்வாறான கிராமங்களுக்கு தொடர்ச்சியாக அனுப்பி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் இங்கு குறிப்பிட்டார்.