கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதி விவரங்கள் கோரியமைக்கு அமைவாக 05.02.2025 அன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், ஜனாதிபதி செயலகத்துக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரால் 09.02.2025 அன்று அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் 1,500 கிலோ மீற்றர் நீளமான கிராமிய வீதிகளைப் புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இதற்கு அமைவாக வடக்கு மாகாணத்தில் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான வீதிகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழான வீதிகள் மற்றும் பாலங்கள், இறங்குதுறைகள் தெரிவு செய்யப்பட்டு 10.02.2025 அன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலருக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஜனாதிபதியால் வரவு – செலவுத் திட்டத்தில் இதற்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.