கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு வருகை தந்த பிரதமரை ஆளுநர் அவர்கள் வரவேற்றார். தொடர்ந்து அங்கு ஆசிரிய மாணவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆளுநர் பங்கேற்றதுடன், தேசிய கல்வியற் கல்லூரி சமூகத்தால் ஆளுநர் மதிப்பளிக்கப்பட்டிருந்தார்.
தேசிய கல்வியற் கல்லூரியில், வடக்கு மாகாண கல்வித்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதமர் அவர்கள் பங்கேற்றதுடன், ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் க.பிரட்லி ஜெனட், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் வடக்கு மாகாணத்தின் கல்வி நிலைமைகள் தொடர்பாக பிரதமருக்கு விரிவாக எடுத்துரைத்தனர். அத்துடன் பிரதமரும் சாதகமான பதில்களை வழங்கினார்.
இதன் பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் புனரமைக்கப்பட்ட நூலகத் திறப்பு விழாவிலும், பிரதமர் அவர்களுடன் இணைந்து ஆளுநர் அவர்களும் பங்கேற்றார்.
இந்த நிகழ்வுகளில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் ஆகியோரும் பங்கேற்றனர்.




