மாற்றத்துக்கு எல்லோரும் தயாராகவேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

கடந்த காலங்களில் தவறாக ஒரு விடயம் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதையே தொடர்வதற்குத்தான் பலர் விரும்புகின்றார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு யாரும் தயாராக இல்லை. தவறானது என்று தெரிந்தால் அதை முடிவுக்கு கொண்டு வந்து சரியானதைச் செய்யவேண்டும். இந்த மாற்றத்துக்கு எல்லோரும் தயாராகவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், வடக்கிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் ஆகியோரை வடக்கு மாகாண ஆளுநர், ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (14.02.2025) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையில் ஒரு விடயமான தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஒரு கூறு எமது பிரதேசத்தை துப்புரவாக வைத்திருத்தல் என்பதாகும். இதன் அங்குரார்பணம் ஒரு நாள் இடம்பெற்றது. அத்துடன் அந்த விடயம் முடிந்துவிடாது. ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றமும் இதைத் தொடர்ந்து கண்காணித்து செயற்படுத்தவேண்டும்.
கரவெட்டி பிரதேச சபையின் செயலாளர் தனது ஒரு வட்டாரத்தில் வரி மீளாய்வை நிறைவு செய்திருக்கின்றார். அது உண்மையில் பாராட்டப்படவேண்டியது. ஒவ்வொரு சபையின் செயலாளர்களும் இவ்வாறு சிந்தித்துச் செயற்படவேண்டும். சொல்லுவதை மாத்திரம் செய்வது என்றில்லாமல் இவ்வாறு புதிய விடயங்களைச் செய்யவேண்டும். ஏனைய சபைகளும் உங்களுடைய சபையின் ஆளுகைக்கு உட்பட்ட ஆதனங்களின் வரி மீளாய்வைச் செய்து உங்கள் வருமானங்களை அதிகரிக்கவேண்டும்.
முதலீட்டாளர்கள் வருகைதரும்போது அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து கொடுங்கள். எமது மாகாணத்துக்கு அதிகளவு முதலீடு தேவை.
கேளரவ ஜனாதிபதி அவர்கள் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கூறியமையைப்போன்று வடக்கு மாகாணத்துக்கு 1,500 கிலோ மீற்றர் நீளமான வீதிப் புனரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கின்றது. இதற்கான வீதிகளைத் தெரிவு செய்யும்போது அதிகாரிகள் நேரடியாகச் சென்று பார்வையிட்டு வீதிகளைத் தெரிவு செய்யுங்கள்.
உங்களுடைய அலுவலகத்துக்கு பொதுமகன் வந்தால் உடனடியாக அவனை அன்பாக அணுகி சேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள். உங்களால் முடியாவிட்டால் மேலதிகாரிகளிடம் அழைத்துச் சென்று பொதுமகனின் தேவையை எப்படி நிறைவு செய்து கொடுக்கலாம் என்று சிந்தியுங்கள். அதிகாரிகள் ‘பந்தடிப்பது’ போன்று வேலைகளை தட்டிக்கழித்து பொதுமக்களை அலைக்கழிக்காதீர்கள். நான் உட்பட எங்கள் அதிகாரிகள் உங்கள் அலுவலகங்களுக்கு திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டு இவை தொடர்பில் அவதானிப்போம்.
சோலைவரி உட்பட உள்ளூராட்சிமன்றங்களுக்கான அனைத்து கட்டணங்களையும் இணையவழியில் பொதுமகன் செலுத்துவதற்கு ஏற்றவகையில் வழிசெய்யுங்கள். இதுவரை அவ்வாறான வழிமுறையில் இணைந்து கொள்ளாத உள்ளூராட்சிமன்றங்கள் விரைவில் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும்.
அரசாங்கமும் டிஜிட்டல் மயமாக்கலைத்தான் ஊக்குவிக்கின்றது. வெளிநாட்டு நிதிமூலங்களில் அமைக்கப்பட்ட கடைகளை குத்தகைக்கு வழங்கும்போது உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை வழங்குங்கள். உள்ளூர்வாசிகள் கேள்விகோரலில் பெற்றுக்கொள்ளாவிடின் மாவட்டத்துக்கு முன்னுரிமை வழங்குங்கள்.
உள்ளூராட்சிமன்றங்கள் மக்களுக் சேவை செய்வதற்கானவையே தவிர வருமானம் ஈட்டுவதற்கானது அல்ல. சேவைகளை முதலில் மக்களுக்கு வழங்குங்கள்.
சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. அவை அகற்றப்படத்தான் வேண்டும். இவ்வளவு காலமும் இருந்தது என்பதற்காக அதை அப்படியே தொடரவிட முடியாது. நான் கடந்த மழை காலத்தின்போது இது தொடர்பில் குறிப்பிட்டிருந்தேன். அதை அவ்வாறு சொல்லிவிட்டு நான் பேசாமல் இருக்கப்போவதில்லை. உள்ளூராட்சி மன்றங்கள் சட்டவிரோத கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். கரவெட்டி பிரதேச சபையின் செயலர், எவ்வாறு இது தொடர்பான நடவடிக்கையைச் செய்தாரோ அதைப்போல ஏனைய சபைகளும் செய்யவேண்டும். அதேபோல, மதகுகள், வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களையும் அகற்றவேண்டும். கடந்த மழை காலத்தில் எங்கெங்கு ஆக்கிரமிப்புக்கள் நடந்துள்ளன என்பதை நீங்கள் அடையாளம் கண்டிருப்பீர்கள். அவற்றை அகற்றுங்கள்.
அதேபோல ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன்னதாக வாய்க்கால்களை துப்புரவு செய்யுங்கள். அதைப் பராமரியுங்கள். பருவமழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருப்பதற்கு வழிவகைகளை செயற்படுத்துங்கள். கடந்த பருவமழையின்போது சேதமடைந்த வீதிகளை முன்னுரிமை அடிப்படையில் புனரமைத்துக்கொள்ளுங்கள்.
சில சந்தைகளில் இன்னமும் பத்து சதவீத விவசாயக் கழிவுகள் அறவிடப்படுகின்றன. இது தொடர்பில் பலரும் பல தடவைகள் முயற்சிகள் எடுத்து கைவிட்டிருக்கின்றனர். நான் இந்த முயற்சியை கைவிடப்போவதில்லை. இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோதும் சில சந்தைகளில் அங்குள்ள கட்டமைப்புக்களால் அவர் எதிர்ப்பை சந்தித்துள்ளார். எமக்கு இதை வெற்றிகரமாகச் செயற்படுத்துவதற்கு பொதுமகன் ஒருவர் சில யோசனைகளை முன்வைத்திருக்கின்றார். அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆராயுங்கள்.
உள்ளூராட்சிமன்றங்களுக்கு சொந்தமான கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பில் பல முறைப்பாடுகள் வருகின்றன. அதை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுங்கள், என்று ஆளுநர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தக் கலந்துரையாடலில் உள்ளூராட்சிமன்றங்கள் தமது நிதியில் இந்த ஆண்டு முன்னெடுக்கவுள்ள சமூகநலனோம்புத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை முன்வைத்திருந்தன. அவை தொடர்பிலும் ஆளுநர் கவனம் செலுத்தினார்.