தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான அங்குரார்ப்பண நிகழ்வு திங்கட்கிழமை காலை (03.02.2025) யாழ். மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட திருநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று அந்தப் பகுதிமக்களுக்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
தூய்மையான இலங்கை செயற்றிட்டம் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது. எமது பிரதேசத்தை துப்புரவாக வைத்திருத்தல் என்பது அதன் ஓர் அலகுதான். 1970ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தூய்மையான மாவட்டமாக யாழ்ப்பாணம் இருந்தது. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. அன்று பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனை குறைவாக இருந்தது. ஆனால் இன்று அது பல்கிப்பெருகிவிட்டது. எமது இடத்தை துப்புரவாக வைத்திருக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டும். எங்களுடைய இடம் நாங்கள்தான் துப்புரவாக வைத்திருக்கவேண்டும். வேறு ஆட்கள் வந்து துப்புரவு செய்து தரமாட்டார்கள். நாங்கள் முன்னர் இந்த இடத்தில்தான் குப்பை போட்டோம். குப்பைகளை எரித்தோம் என்று சொல்லிக்கொண்டிருக்காமல் எங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். மதிலால் வீதியில் குப்பைபோடுவது, வாய்க்கால்களில் குப்பைகளைப்போடுவது என்று முறைதவறிய செயற்பாடுகளில் ஈடுபடாமல் எங்கள் எண்ணங்களில் மாற்றங்களை உருவாக்கவேண்டும். அதுதான் தூய்மையான நகரத்தின் உண்மையான இலக்காக இருக்கும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், கழிவுகளை வீட்டுக்கு வெளியே வீசும் மக்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
யாழ். மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரி தவரூபன், எந்த இடத்தில் குப்பைகள் அதிகமாக சேருகின்றன என்பதை அடையாளப்படுத்துவதுதான் முக்கியமானது எனக் குறிப்பிட்டார். கழிவுமுகாமைத்துவத்தின் வெற்றி அதில்தான் தங்கியிருக்கின்றது என்று தெரிவித்த அவர், ஒவ்வொரு குடியிருப்பாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் ஊடாக மாற்றத்தை உருவாக்க முடியும் என்றார். ஒவ்வொரு வீடுகளிலும் அண்ணளவாக 88 சதவீதமான உக்கக் கூடிய கழிவுகளே சேருகின்றன என்றும் அதை முகாமைத்துவம் செய்யக் கூடிய வழிவகைகளை குடியிருப்பாளர்களுக்கு சொல்லிக் கொடுப்பதன் ஊடாக இந்தப் பிரச்சினையை சரிசெய்ய முடியும் எனத் தெரிவித்தார். எஞ்சிய 12 சதவீதமான கழிவுகளைத்தான் அகற்றுவதற்கான ஒழுங்குகளை உள்ளூராட்சி மன்றங்கள் மேற்பார்வை செய்யவேண்டியிருக்கும் எனக் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட பிரதிப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரேமன்ஸ் தனது உரையில், இலங்கையில் குப்பைகளை எரித்தல் 2017ஆம் ஆண்டு வர்த்தமானி மூலம் தடை செய்யப்பட்டுள்ளது எனச்சுட்டிக்காட்டினார். குப்பைகளுடன் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக்கை எரிப்பதால் அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயு புற்றுநோய்க்கான மூலகாரணி எனச் சுட்டிக்காட்டிய அவர், நோய்களுடன் வாழப்போகின்றோமா இல்லை ஆரோக்கியமான சமூகத்தில் இருக்கப்போகின்றோமா என்பதை தீர்மானிப்பது அந்ததந்த மக்கள்தான் என்றும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்து பொதுமக்கள், யாழ். மாநகர சபைப் பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர். அதேபோன்று பாசையூர் சந்தை கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற துப்புரவு பணியிலும் வடக்கு மாகாண ஆளுநர் கலந்துகொண்டார்.






