வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஓ.எம்.) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத்தலைவர் கிறிஸ்டின் பார்ஸோவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் (ஐ.ஓ.எம்.) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பணிக்குழுத்தலைவர் கிறிஸ்டின் பார்ஸோவுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் வியாழக்கிழமை (30.01.2025) இடம்பெற்றது.
வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பணிக்குழுத்தலைவர் கிறிஸ்டின் பார்ஸோ, முதல் தடவையாக இங்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அறிவது தனது பயணத்தின் நோக்கம் எனவும் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.
கடந்த காலங்களில் மாவட்டச் செயலராக இருந்தபோது ஐ.ஓ.எம். உடன் இணைந்து பணியாற்றியமையை ஆளுநர் நினைவுகூர்ந்தார். தற்போதும் யாழ். மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைப்பாடுகள் அதிகளவில் இருக்கின்றன எனவும் அவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதலான உதவி தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இளையோருக்கான வேலை வாய்ப்பு பெரும் சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர், கடந்த காலங்களில் இயங்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கின்றமையும் இதற்குக் காரணம் எனச் சுட்டிக்காட்டினார். இதனால் இளையோர் உயிர்கொல்லி போதைப்பாவனைக்கு அடிமையாகும் நிலைமையும் அதிகரித்துச் செல்கின்றது என்பதைக் குறிப்பிட்டதுடன், முதலீடுகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதன் ஊடாக வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
வடக்கின் பல்வேறு தேவைப்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ஐ.ஓ.எம்மிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படும் தமிழ் இளைஞர்களை மீட்டுத்தருமாறு அவர்களது பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் ஆளுநர் இதன்போது ஐ.ஓ.எம்மிடம் கையளித்தார்.