‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டம் முன்னெடுப்புத் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் மாலை (22.01.2025) இடம்பெற்றது. ‘தூய்மையான இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழ், எதிர்வரும் 03.02.2025 அன்று யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபையால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்புத் தரப்பினர், பாடசாலை மாணவர்கள், திணைக்களப் பணியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் துப்புரவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
கடந்த காலங்களிலும் பல தடவைகள் நகரைச் சுத்தம் செய்தல், கடற்கரையோரங்களைச் சுத்தம் செய்தல் ஆகிய செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், துப்புரவு செய்த மறுநாளே குப்பைகளை அந்த இடங்களில் பொதுமக்கள் கொட்டுவதால் சுத்தம் செய்ததன் நோக்கம் நிறைவடையாத சந்தர்ப்பங்களே அதிகம் எனத் தெரிவித்தார். இம்முறை அவ்வாறான நிலைமை ஏற்படக் கூடாது என ஆளுநர் குறிப்பிட்டார்.
எமது மக்களிடையே இவ்வாறான ஒழுக்கமின்மை கலாசாரம் அதிகரித்துச் செல்வதாக வேதனை வெளியிட்ட ஆளுநர், 1970 – 1980 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் யாழ்ப்பாண நகரமே இலங்கையில் தூய்மையான நகரமாக அடையாளப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்தார்.
பாதுகாப்புத் தரப்பினர் தமது படையினரை இந்தச் செயற்றிட்டத்துக்கு வழங்குவதாகத் தெரிவித்தனர். ஆனால் குப்பைகளைப் போடும் மக்களும் உணரும் வகையில் அவர்களையும் இந்தச் செயற்றிட்டத்தில் நிச்சயம் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஒவ்வொரு இடங்களிலும் இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களும் அதில் உள்ளடக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என பாதுகாப்புத் தரப்பினர் வலியுறுத்தினர்.
எங்கள் பிரதேசத்தை துப்புரவாக வைத்திருக்கும் இந்தச் செயற்றிட்டத்தை முதல் கட்டமாக யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை பிரதேசங்களில் ஆரம்பித்தாலும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் இதை நடைமுறைப்படுத்தவேண்டும் என பிரதம செயலாளர் இ.இளங்கோவன் கோரிக்கை விடுத்தார்.
யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு நடைபெற்ற பின்னர் அந்தப் பகுதிகளில் மக்கள் எதிர்காலத்தில் குப்பைகளை தரம்பிரித்து போடுவதற்குரிய ஒழுங்குகளை யாழ். மாநகர சபை முன்னெடுக்கும் என்றும், அதேநேரம் குப்பைகளைக் கொட்டுபவர்களைக் கண்காணிக்க சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கும் எனவும் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன் தெரிவித்தார். மேலும் மாநகர சபையின் உபவிதிகள் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், அதை மீறி குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு அந்த இடத்திலேயே தண்டம் விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கட்டாக்காலி கால்நடைகள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதம செயலர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நகரை தூய்மையாக வைத்திருப்பது என்பது குப்பை கூழங்களை அகற்றுவதுடன் மாத்திரம் முடிந்துவிடக்கூடாது. யாழ். நகரின் அழகை குலைக்கும் வகையில் பேருந்துகள் உள்ளன எனவும் அவற்றையும் வேறிடங்களுக்கு அகற்றவேண்டும் என யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத் தலைவர் இ.ஜெயசேகரன் கோரினார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வர்த்தக நிலையங்களால் எதிர்கொள்ளும் சிரமங்களையும் சுட்டிக்காட்டிய அவர் முன்னர் முன்மொழியப்பட்டவாறு பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் நகருக்கான தரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் தனித்துவமான நடவடிக்கை எடுக்கப்பட்டுவதாகத் தெரிவித்த ஆளுநர், அவற்றுக்கான உரிய ஒழுங்குகள் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், யாழ். மாவட்டச் செயலர், திணைக்களப் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.







