யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த வடக்கின் ஏனைய 4 மாவட்டங்களிலும் அரச காணிகள் இருக்கதக்கதாக காணிகள் அற்றவர்கள் பட்டியல் இருக்கின்றமை வேதனையானது. அதனைத் தீர்ப்பதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
பிரமாண அடிப்படையிலான கொடையின் கீழ் 85 மில்லியன் ரூபா செலவில், வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் கிளிநொச்சி நகரில் புதிதாக அமைக்கப்பட்டு வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (03.01.2025) திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இடப்பெயர்வுகள் மற்றும் சுனாமி பேரிடர் காரணமாக 80 சதவீதமான காணி ஆவணங்கள் அழிவடைந்து விட்டிருந்த நிலையிலும் வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக பெரும்பாலானவற்றுக்கு தீர்வு காணப்பட்டதாக தலைமையுரையில் வடக்கு மாகாண காணி ஆணையாளர் அ.சோதிநாதன் சுட்டிக்காட்டினார்.
மக்களின் வீடுகளுக்கே அரச சேவையைக் கொண்டு செல்லும் ‘ஒன்லைன்’ முறைமையின் நடைமுறையாக்கத்தை காணி விடயத்திலும் எமது காலத்தில் செய்வோம் என வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான காணிப் பிணக்குகளே அதிகம் வருகின்ற நிலையில் மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தில் உளவள ஆலோசகர்களையும் பணிக்கு அமர்த்தவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்டச் செயலர் சு.முரளிதரன் குறிப்பிட்டார்.
இதேவேளை காணி என்பது வடக்கு மாகாண மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடையது என வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில், கிளிநொச்சி மாவட்டச் செயலராக போர் காலத்தில் இருந்தமையை நினைவுகூர்ந்தார். அன்றைய காலத்தில் கிளிநொச்சி மக்களது காணி ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக ஏற்றிச் செல்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு இறுதி நேரத்தில் அனுமதிமறுக்கப்பட்டதையும் குறிப்பிட்ட அவர், போர் முடிவடைந்த பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவை எரிந்து சாம்பலாகியிருந்ததைக் கண்டதாகவும் தெரிவித்தார். அந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டிருந்தால் பல காணிப் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வைக் கண்டிருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
காணி அணுகல்கள் ஏழை மக்களுக்கு மறுக்கப்படுகின்றன என்றும் வசதிபடைத்தோர் வசமே காணிகள் செல்வதாகவும் குறிப்பிட்ட ஆளுநர் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இடமாற்றங்கள் வழங்கப்படும்போதுதான் பல அரச உத்தியோகத்தர்களுக்கு நோய் நிலைமை இருக்கின்றதே தெரியவருகின்றது என்றும், அவர்கள்தான் தங்கள் பெற்றோர்களை கவனமாகப் பார்த்துக்கொள்கின்றார்கள் என்பதும் அப்போதுதான் தெரியவருகின்றது எனவும் குறிப்பிட்ட ஆளுநர் இடமாற்றங்களை நிறுத்துவதற்காக இவ்வாறு அரச அதிகாரிகள் தெரிவிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் மாத்திரமே, மாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களுக்கும் இடையில் சீரான பரம்பல் இல்லை என்பதைக் குறிப்பிட்ட ஆளுநர் அதன் காரணமாக யாழ். மாவட்டத்திலிருந்து ஏனைய மாவட்டங்களில் பணியாற்றுவது கட்டாயம் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலர் – நிர்வாகம் திருமதி எழிழரசி அன்ரன் யோகநாயகம், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலர் – திட்டமிடல் எம்.கிருபாசுதன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், யாழ். மாவட்ட பதில் மாவட்டச் செயலர் ம.பிரதீபன் மற்றும் பிரதேச செயலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.