வட மாகாண நன்னடத்தை பாதுகாவல் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தால் ‘’பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக நடத்துவோம்’’ எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் மண்டபத்தில் 05.10.2024 திகதி காலை இடம் பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு.இ. இளங்கோவன் பிரதம செயலாளர் வடக்கு மாகாணம், திரு.ஜே. எஸ். அருள்ராஜ் செயலாளர் சுகாதார அமைச்சு வட மாகாணம், ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். வட மாகாண நன்னடத்தை பாதுகாவல் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர், உத்தியோகஸ்தர்கள், சிறுவர் அபிவிருத்தி நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள சிறுவர் விருத்தி நிலையத்தில் உள்ள சிறுவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது வடக்கு மாகாண மட்டத்தில் முதலிடம் பிடித்த கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. கலை நிகழ்வுகள் எமது வரலாறு, கலை கலாச்சாரம் என்பவற்றை எடுத்து இயம்புவதாக நிகழ்த்தப்பட்டமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாவட்ட மட்டங்களில் முதல் நிலை பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களின் ஊடாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டு பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
பிரதம விருந்தினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உரையாற்றிய போது சிறுவர்களுக்கான உரிமைகளில் சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு, போன்றன முக்கியமானவை. அதனை வடக்கு மாகாணத்தில் இயங்குகின்ற சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்கின்றன.
இந்த நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதோடு இன்னும் பல மாணவர்கள் இவ்வாறு பல்கலைக்கழகம் செல்வதற்கு தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும், இந்த சிறுவர் இல்லங்கள் மென்மேலும் சிறப்பாக நடைபெற வேண்டும்.சிறுவர் இல்லங்களில் இருக்கின்ற பிள்ளைகளின் எதிர்காலமானது சிறப்பாக அமைய வேண்டும். சிறுவர் இல்லங்களுக்கு பொறுப்பாக இருக்கின்ற அனைவருக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் கூறினார்.
மேலும் சிறுவர்கள் சிறுவர்களாக இருக்கின்ற போதே அவர்களுக்கு ஏனைய சிறார்களையும் சக மனிதர்களையும் மதிக்கவும் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கவும், அன்பு செலுத்தவும் மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்களாகவும், இரக்கம் காட்டவும் கற்றுக் கொண்டால் சிறந்த மனிதர்களாக உருவாக முடியும் என கருத்து தெரிவித்தார்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியுமே தவிர பணத்தை சேமிப்பதால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இந்த சிறுவர்கள் அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமையவேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார்.இறுதியில் நிகழ்வில் கலந்து சிறப்பித்தமைக்காக கௌரவ ஆளுநர் அவர்களுக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டது.