வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு பனை சார் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும், தாலம் சஞ்சிகை வெளியீடு மற்றும் பனை அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் என்பன 2024.07.22-ம் திகதி தொடக்கம் 2024.07.28 திகதி வரை திரு. ந. திருலிங்கநாதன் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரும் வடக்கு மாகாணம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஆரம்ப நாள் நிகழ்ச்சியாக கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வினை திரு. இ. இளங்கோவன், பிரதம செயலாளர் – வடக்கு மாகாணம், திரு. பொ. வாகீசன், மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் ஆகியோர்களால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இறுதி நாள் நிகழ்வுகளுக்கு கௌரவ கடற்றொழில் மற்றும் நீரியல்வள துறை அமைச்சர், பிரதம செயலாளர் – வடக்கு மாகாணம் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர். இதில் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் மாகாண மட்டம் மற்றும் மாவட்ட மட்டங்களில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பணப் பரிசில்களும் புத்தக பைகளும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சிறந்த அங்கத்தவர்களுக்கு சின்னமும் பொன்னாடையும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் தாலம் ஓலை-5 நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கத்துவச் சங்கங்களினால் கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வுகளில் திணைக்களத் திணைக்களத் தலைவர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாலை நேர கலை நிகழ்வுகள் கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது.