வட மாகாணத்தைச்சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்

தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் கோரிக்கைக்கு அமைய, வடக்கு  மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் (14/05/2024) இன்று நடைபெற்றது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பின் தலைவர் உள்ளிட்ட குழுவினரும், ஆளுநரின் உதவிச் செயலாளர், உள்ளுராட்சித் திணைக்கள பணிப்பாளர், மாகாண கலாசார உதவிப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

உள்ளூர் எழுத்தாளர்களின் தற்போதைய நிலைமை, பதிப்பகங்கள், அச்சகங்களின் செயற்பாடுகள், நூல் பதிப்பு மற்றும் விற்பனை, கலை, இலக்கியத் துறையின் சமகாலப்போக்கு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சி அமைப்புகள், பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள், கிராம அபிவிருத்தி திணைக்களங்கள் தம்மிடம் காணப்படும் நிதியில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி, உள்ளூர் எழுத்தாளர்களின் நூல்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இதன்போது கௌரவ ஆளுநர் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, தமிழியல் ஆய்வு நடுவகம் அமைப்பை வடக்கு மாகாணம் முழுவதும் செயற்படும் வகையிலாக பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார். உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதைப் போல, கலைகளையும் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கௌரவ ஆளுநர் குறிப்பிட்டார். திறந்தவெளி அரங்குகளில் உள்ளூர் கலைகளை மேடையேற்றி அவற்றினை அழிந்திடாமல் பாதுகாத்து புத்துயிர் வழங்க மாகாண கலாசார திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.