யாழ் மாவட்டச் செயலகத்தில் ஊராட்சி முற்றக் (Town Hall) கூட்டம் 05 மார்ச் 2024 அன்று நடைபெற்றது. பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் இணைத் தலைமையில் இக்கூட்டம் நடாத்தப்பட்டது.
இக் கூட்டத்திற்கு வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ. வாகீசன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், பல்துறை சார் அரச உயர் அலுவலர்கள், Chrysalis நிறுவன திட்ட முகாமையாளர் திரு. மகேஸ்வரன் பிரபாகரன், சிரேஷட திட்ட இணைப்பாளர், அரசகேசரி கிறகர் ஜொகான்சன், பால்நிலை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசகர் பு. தர்மேந்திரா, சமூக பொருளாதார ஆலோசகர் செல்வின் இரேனியஸ், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் செல்வி. சாந்தாதேவி தர்மரட்ணம் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Chrysalis இன் செயற்திட்ட முகாமையாளர் திரு. எம். பிரபாகரன், சமூக பொருளாதார வளர்ச்சியில் பொதுமக்களின் ஈடுபாட்டிற்கானதும், சமூக சவால்களை எதிர்கொள்வதற்கானதுமான ஒரு செயலூக்கமான தளமாக ஊராட்சி முற்றக் கூட்டங்கள் முக்கிய பங்காற்றுவதைத் தெளிவாக வலியுறுத்தினார். எதிர்காலத்தில் நடைபெறவுள்ள இவ்வாறான ஊராட்சி முற்றக் கூட்டங்களுக்கென முன்மொழியப்பட்ட ஒரு நியம செயற்திட்ட நடைமுறையை (Standard Operating Procedure) அறிமுகப்படுத்திய அவர், அந்நியம செயற்திட்ட நடைமுறை தொடர்ந்தும் பரிணமித்து வருவதால் அதற்கான பரிந்துரைகளை வரவேற்றார். அடுத்து நடைபெறவுள்ள கூட்டங்களில், தற்பொழுது கலந்துரையாடப்பட்ட விடயங்களின் பின்னூட்டல் நடவடிக்கைகள் இற்றைப்படுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்துடன் கூட்டம் நிறைவுற்றது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட, ‘பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களின் ஊடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தல் (BRIDGE)’ எனும் திட்டத்தின் கீழ் Chrysalis இன் சிறப்பான ஆதரவுடன், பயனுள்ள இந்த ஊராட்சி முற்றக் கூட்டம் சாத்தியமாக்கப்பட்டது.