சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில் ‘ அவளையும் உள்வாங்குங்கள் பொருளாதார வலுவூட்டல் மூலம் பாலின சமத்துவத்தைத் துரிதப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் 06.03.2024 புதன்கிழமை அன்று சாவகச்சேரியின் நகரசபையின் பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக வடமாகாணத்தின் பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும், செயலாளர் திரு.பொ.வாகீசன், மகளிர் விவகார அமைச்சு மற்றும் மாகாண அமைச்சு செயலாளர்கள்,பிரதிப்பிரதம செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் சிறந்த பெண் சாதனையாளர்களின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து பெண் தொழில் முயற்சியாளர்களின் கண்காட்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதிதிகள் மேடைக்கு வரவழைக்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் மற்றும் அகவணக்கம் செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து பொன்னாலை சந்திரபரத கலாலயாத்தின் தழிழ் பண்பாட்டினை பிரதிபலிக்கும் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. அடுத்து மகளிர் விவகார அமைச்சின் உதவிச்செயலாளரினால் வரவேற்புரையும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளரினால் தலைமையுரையும் மற்றும் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவரினால் சிறப்புரையும் வழங்கப்பட்டது.
மேலும் இவ்வருடம் விளையாட்டு, கலை சுயதொழில் ஆகிய துறையில் தடம்பதித்ததுடன் அத்துறையில் புதிய பரிமாணங்களை உட்புகுத்தி முன்னெடுத்துச்செல்கின்ற வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 3 சிறந்த பெண் சாதனையாளர்களின் பல்வேறு தொழில் முயற்சிகளில் தமது திறமையை வெளிக்காட்டியதுடன் முன்னேற்றப்பாதையில் 15 பெண் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் முதலில் மகளிர்களுக்கான வாழ்த்துக்களை தெரிவித்து, 2024ஆம் ஆண்டின் மகளிர் தினத்தின் குறிக்கோளாக ‘பெண்களின் முதலீட்டு ஊக்குவிப்புக்களையும் அவர்களின் முன்னேற்றத்தினை துரிதப்படுத்துவதுமே நோக்கமாக இருக்கின்றது எனவும் எமது நாட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் பெண்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட சுகாதார வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த வருடத்திற்குள் பெண்பிள்ளைகளுக்குத் தேவையான 100 மலசல கூட வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் கூறினார்.தொடர்ந்து பெற்றோர்கள் பெண்பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும் அரசியலில் பெண்கள் வலுநிலைப்படுத்தலுடன் பாலின சமத்துவத்தைப் பேண வேண்டும்; எனக்கூறியதுடன் இன்று பெண்கள் சமய சமூக செயற்பாடுகளில் சிறந்து விளங்குகின்றார்கள் எனவும் பெண்களுக்கு பல்வேறு துறைகளிலும் ஏற்படும் வன்முறைகள், அசௌகரியங்கள் தவிர்ப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறாக மகளிர் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர் அவர்களின் நன்றியுரையுடன் இந்நிகழ்வு நிறைவுபெற்றது.