வடமாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் தேசிய சுற்றாடல் வாரம் ( 2023.05.30 – 2023.06.05 )

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் நிகழ்ச்சித் திட்டத்தினால் இவ்வருடத்தின் சர்வதேச சுற்றாடல் தினமானது ‘பிளாஸ்ரிக் மூலம் ஏற்படக்கூடிய மாசை தடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த வகையில் இலங்கையில் இந்த ஆண்டு மே மாதம் 30ம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 05ம் திகதி வரையிலான வாரம் ‘தேசிய சுற்றாடல் வாரமாக’ அறிவிக்கப்பட்டது. இதற்கமைவாக வடக்கு மாகாண சபையிலும் வாரம் முழுவதும் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன.

முதற்கட்டமாக 2023.05.30 அன்று மரநடுகை தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாணத்தின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் மரநடுகை மேற்கொள்ளப்பட்டது.

பிரதம செயலாளர் அலுவலகம்

2023.05.31 அன்று வளி மாசாக்கல் மற்றும் அதன் பாதகமான தாக்கங்களைக் குறைக்கும் நோக்குடன் வடமாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் குளிரூட்டியின் பாவனையினை நிறுத்தி வைத்தல் உள்ளடங்கலாக வெவ்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

2023.06.01 அன்று சுற்றாடல் சுத்தப்படுத்துகை தினத்தினை முன்னிட்டு சிரமதானம் நடைபெற்றது. இச்சிரமதானத்தில் பிரதம செயலாளர் செயலகம் மற்றும் ஏனைய அமைச்சுக்கள், திணைக்களங்களின் அலுவலக சுற்றுச்சூழல் சுத்தம் செய்யப்பட்டது.

    

    

    

பிரதம செயலாளர் அலுவலகம் மற்றும் ஏனைய அமைச்சுக்கள்

உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு தினத்தினை அனுஷ்டிக்கும் பொருட்டு வடக்கு மாகாண சபையின் அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் வளாகத்திலுள்ள மரக்கன்றுகளுக்கு நீரூற்றப்பட்டதுடன் உயிர்ப்பல்வகைமை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நீர் மற்றும் நீர் மூலாதாரங்களைப் பாதுகாக்கும் தினத்தினை வலியுறுத்தி 2023.06.03 அன்று பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டு வளவாளர்களால் நீரின் முக்கியத்துவம் மற்றும் அதன் எதிர்கால பயன்பாடுகள் தொடர்பாக கருத்துரைகள் மற்றும் முன்வைப்புக்கள் இடம்பெற்றன.

    

   

தேசிய சுற்றாடல் தினத்தினைக் கொண்டாடும் முகமாக 2023.06.05 அன்று பேண்தகு காணி முகாமைத்துவம், பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு அது தொடர்பான விளக்கங்கள் வளவாளர்களால் எடுத்துரைக்கப்பட்டதுடன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களிலும் பிளாஸ்ரிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டன.

    

    

மேலும் குறித்த தினத்தன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளினால் குறிக்கப்பட்ட கடலோரங்களில் கழிவகற்றல் மற்றும் சிரமதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

    

இவ்வாறாக தேசிய சுற்றாடல் வாரம் வடக்கு மாகாண சபையினால் காத்திரமான செயற்பாடுகளை உள்ளடக்கி அனுஷ்டிக்கப்பட்டது.