கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போசணை மட்டத்தினை பேணுவதற்கான சத்துணவுப் பொதி வழங்கல்

சரியான போசணை மட்டத்தினை பேணுவதற்கான கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துணவுப்பொதி வழங்கும் நிகழ்வானது கௌரவ ஆளுநர் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரியின் தலைமையின் கீழ் 2022.07.20 அன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலுமிருத்தும் மீன்பிடித் தொழிலில் தங்கியிருக்கின்ற குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அடங்கலாக மந்த போசணையுடைய 924 தாய்மார்களின் அனிமியா பாதிப்பு நிலையினைக் கருத்திற் கொண்டு ரூபா 6,000,000 (ஆறு மில்லியன்) மதிப்புடைய அவர்களுக்குத் தேவையான போசனைப் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதம செயலாளர், வடமாகாணம் திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களும், சிறப்பு விருந்தினராக மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், திருமதி. ரூபினி வரதலிங்கம், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி.ஆ.கேதீஸ்வரன், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி. த. பாலமுரளி அவர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள், கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினாராக உரையாற்றிய மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில் ”மந்தப் போசணையுடைய கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நாளொன்றுக்கு தேவையான உணவை உட்கொள்ள வேண்டும் எனவும், காலத்தின் தேவை மற்றும் அவர்களின் ஆரோக்கியம் கருதியும் ஊட்டச் சத்துக்கள் தொடர்பான விளக்கத்தை அளித்ததுடன் இந்நிகழ்வானது மீன்பிடித் தொழிலில் தங்கியிருக்கின்ற குடும்பங்களின் போசனை நிலையினைக் கருத்திற்கொண்டே நடைபெறுகின்றது” எனவும் குறிப்பிட்டார்.

மேலும் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில் ”இன்றைய காலகட்டத்தில் பலரும் பொருளாதார நிலைகளை இழந்துள்ளனர். இதனால் உணவுப் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக்கறியாகவெயுள்ளது. பொருளாதார நெருக்கடி நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாகவே இந் நிகழ்வு நடைபெறுகிறது” எனக் குறிப்பிட்டார்.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினாராக பங்கேற்ற பிரதம செயலாளர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ” ஒவ்வொரு கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நாளாந்தம் பின்பற்றும் போசணையின் அளவு, உணவகளின் வகை, அவர்களின் உணவுப் பழக்க வழக்கம், நாளாந்தம் உட்கொள்ளும் உணவுகளின் தரம் என்பவை பற்றி விளக்கமளித்ததுடன் இந் நிகழ்வானது மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சுகாதார ஊட்டச்சத்து நிபுணரால் வழங்கப்பட்ட அறிவுரைக்கு அமைவாக கர்ப்பவதிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இருவார காலத்துக்குத் தேவையான போசணைகள் அடங்கிய உணவுப் பொதிகள் முதற்கட்டமாக இன்று வழங்கி வைக்கப்படுகிறது” எனவும் கூறினார். அத்தோடு பிரதம செயலாளரினால் சத்துணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.