2021 ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டு நடைபெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ. எஸ். எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் 09 யூன் 2021 அன்று மதியம் 2.30 மணியளவில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் பிரதமசெயலாளர், ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் உதவிச்செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இக்குறித்த கலந்துரையாடலில் விசேட தேவைகளுடைய குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களினால் வடமாகாண ஆசிரியர் வாண்மை விருத்தி பயிற்சிகளுக்காக பெருமளவு பணம் செலவிடப்படுவதாகவும் அவ்வாறான பெருந்தொகை பணம் செலவிடவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்ததுடன் குறித்த நிதியை விசேட தேவையுடைய குழந்தைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த ஆலோசனை வழங்கினார்.
மேலும் இலத்திரனியல் பரிவர்த்தனை சட்டம் 2006 4இல 19 மற்றும் அதன் திருத்தம் 2017 இல 25 இன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக கொவிட்-19 இடர் காலத்தில் அனைத்து அரச நிறுவன நடவடிக்கைகளையும் மின் ஊடகத்தின் மூலமாக (நிகழ்நிலை கட்டணம், இலத்திரனியல் கையொப்பம், இலத்திரனியல் கட்டணம், இலத்திரனியல் பெறுகை) தடையின்றி முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
அத்துடன், முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விசேடமாக கண்காணிக்குமாறு சுகாதார பணிப்பாளர் மற்றும் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டதுடன் வைத்தியர் ஓய்வு விடுதி, தாதியர் ஓய்வு விடுதி மற்றும் நோயாளர் விடுதி அமைக்கப்படுகின்றபோது தற்போதைய அவசரதேவைப்பாட்டின் அடிப்படையில் குறிப்பாக தெல்லிப்பழை மற்றும் ஊர்காவற்துறை பிரதேசங்களின் வைத்திய கட்டட தேவைப்பாடுகளுக்கு இவ்வாண்டில் முன்னுரிமை வழங்கி திட்டங்களை முன்னெடுக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் இவ்வருடத்திற்கான திட்டங்களை ஒக்டோபர் மாதத்தற்கு முன்னர் மேற்கொண்டு நிதி ஒதுக்கீடுகளினை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்தார்.
மேலும் தற்போதைய பயணத்தடை காலப்பகுதியில் கட்டட வேலைகளுக்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் கட்டட ஒப்பந்தக்காரர்கள் சிரமங்களை எதிர் கொள்வதால் வேலைகள் தாமதமடைவதாக சுட்டிக் காட்டப்பட்டதனை தொடர்ந்து, குறித்த கட்டட வேலைகளுக்கான மூலப்பொருட்களினை பெற்றுக்கொள்ளும் வர்த்தக நிலையங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரம் ஒப்பந்தக்காரர்கள் மூலப்பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.