அரசாங்கத்தினால் நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசி செயற்திட்டத்திற்கமைய வட மாகாணத்தின் யாழ் மாவட்ட மக்களை கொவிட்-19 பெருந்தொற்றிடரில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் அதிமேதகு ஐனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரால் யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 50,000 தடுப்பூசிகளை வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு, கௌரவ வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் தலைமையில் யாழ் போதனா வைத்தியசாலையில் 30 மே 2021 அன்று காலை 9 மணிக்கு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கௌரவ ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் யாழ் மாவட்டத்திற்கான கொவிட்-19 தடுப்பூசிகள் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், வட மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் நாளாந்தம் அதிக தொற்றாளர்கள் இனங்காணும் இடங்களுக்கு முன்னுரிமை வழங்கி , அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் அவர்களால் வழங்கப்பட்ட தடுப்பூசிகளுக்காக வட மாகாண மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்தார்.அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கும் சுகாதார தரப்பினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கும் நன்றி தெரிவித்ததுடன் அனைத்து பொதுமக்களையும் சமூக பொறுப்புணர்வுடன் தொடர்ந்து சுகாதார வழிகாட்டல்களை மிக இறுக்கமாக கடைப்பிடித்து சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைத்தார்.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், கொவிட்-19 தடுப்பு செயலணியின் இணைத்தலைவரும் மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா மற்றும் வட மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், பிரதமரின் வடக்கு கிழக்கு இணைப்பாளர், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் போதனா வைத்தியசாலையின் உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார தரப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.