காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள சீமெந்து தொழிற்சாலை மற்றும் துறைமுகம் தொடர்பான கலந்துரையாடல் 18 டிசெப்பர் 2020 அன்று காலை 9.3௦ மணிக்கு வடமாகான ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ்அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கௌரவ இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜயந்த சமரவீர பொருட்கள் வசதிகள், கொள்கலன் களஞ்சியங்கள், துறைமுகங்கள் விநியோக வசதிகள் மற்றும் படகுகள் மற்றும் கப்பல் தொழில் மேம்பாட்டு அதிகாரி, அமைச்சின் செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், துறைமுக அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், காணி திணைக்கள அதிகாரிகள், மாவட்ட அரச அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு அண்மையில் உள்ள நிலத்தின் உரிமம் தொடர்பான பிரச்சனை, காங்கேசன்துறைக்கும் காரைக்காலிற்கும் இடையில் படகுச்சேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாகவும் மற்றும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் அபிவிருத்தி மற்றும் இறங்கு துறை அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த கௌரவ வடமாகாண ஆளுநர் அவர்கள் காங்கேசன்துறை நிலப்பகுதியில் துண்டங்களாக காணப்படும் பகுதிகளின் உரிமை தொடர்பான பிரச்சினைகளை காணி நில அளவைத் திணைக்களத்தின் உதவியுடன், கள விஜயம் மேற்கொண்டு உறுதிப்படுத்தலை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
மேலும் காங்கேசன்துறைக்கும் காரைகாலுக்கும் இடையில் படகுச்சேவையை ஆரம்பிப்பதன் மூலம் மத மற்றும் கலாச்சார ரீதியான சுற்றுலாத்துறை விருத்தியை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கபட்டதுடன், காங்கேசன்துறை பகுதியில் சிதைவடைந்துள்ள அணைக்கட்டுகளை புனரமைப்பதற்கு தேவையான கற்களை வவுனியாவிலிருந்து பெற்றுக்கொள்வதற்கு வவுனியா அரச அதிபருடன் கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார். அத்துடன் இத் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பாக எடுக்கபட்ட நடவடிக்கையானது வடக்கு மக்களுக்கு கிடைத்த வரபிரசாதம் என குறிப்பிட்ட கௌரவ ஆளுநர் அவர்கள், இராஜாங்க அமைச்சர் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு தனது பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.
மேலும், யாழ்பாணத்தில் உற்பத்தியாகும் வெங்காயம், வாழைப்பழம் போன்ற பொருட்களை புகையிரத திணைக்களத்தின் உதவியுடன் சேமிப்பு திட்டங்களின் சாதகத் தன்மை பற்றி கலந்துரையாடி கொழும்பிற்கு ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியகூறுகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.