சுகாதார துறை சார்ந்த நிதி மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாணத்திற்கு உட்பட்ட சுகாதார துறைசார்ந்த நிதி மற்றும் நிர்வாக விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் 1-12-2௦2௦ஆம் திகதி இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர்இ வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்இ மற்றும் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது வடமாகாண சுகாதாரத்துறையில் உள்ள பதவி வெற்றிடங்கள், அதற்கான ஆட்சேர்ப்பு முறையிலுள்ள பிரச்சனைகள், சில ஓய்வுபெற்ற தொழிலாளர்களுடைய ஓய்வூதிய காலதாமதங்கள், தொழிலாளர்களின் இடமாற்றம் தொடர்பான சிக்கல்கள் போன்றனவற்றை சுகாதார துறைசார் உத்தியோகத்தர்கள், கௌரவ ஆளுநர் அவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஆளுநர் அவர்கள் சுகாதார துறைசார் வெற்றிடங்களுக்கு தன்னார்வலர்களாக பணிபுரிந்தவர்களை பரிந்துரை செய்யும் பொழுது அவர்களுடைய உண்மைத் தன்மையை ஆராய்ந்து பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்வுதியம் பெறுவதிலுள்ள சிக்கல்களை எழுத்துமூலம் கௌரவ சுகாதார துறை அமைச்சர் அவர்களிடம் தெரிவியுங்கள் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் சிறு தர தொழிலாளர்களுடைய எந்தவொரு இடமாற்றமும் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் தெரிவிக்கப்படாமல் செயற்படுத்தப்பட கூடாது எனவும், அவ்வாறு ஏதேனும் ஒரு இடமாற்றம் செய்யப்பட்டால் அது அதிகார துஸ்பிரயோகமாக கருதப்படுமென சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறும் தெரிவித்தார்.

வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், அவ் உணவுகள் தயாரிக்கப்படும் முறை குறித்து கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள் ஒவ்வொரு வைத்தியசாலை சார்பாகவும், தனித்தனியாக வைத்தியசாலையில் உள்ள சமையல் அறையின் தன்மை, தூய்மை, அங்கு வேலை செய்பவர்களுடைய விபரம், கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் தொடர்பான அறிக்கைகளை தன்னிடம் சமர்பிக்குமாறும் அறிவுறுத்தினார்.

மேலும் அடுத்த ஆண்டு முன்னெடுக்கவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கேட்டறிந்த ஆளுநர் அவர்கள், அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முன்னர் உங்களுடைய பொறுப்பிலுள்ள சொத்துக்கள் (கட்டடங்கள், வாகனங்கள், தளபாடங்கள்) பற்றிய விரிவான விபரங்களை சேகரிக்குமாறும், அவற்றில் முழுமையாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் சொத்து விபரங்களை அடையாளப்படுத்தி அவ் வளங்களை வேறு எவ்வழியில் முழுமையாக பயன்படுத்த முடியுமென திட்டமொன்றை உருவாக்குமாறும் அத்துடன் அடுத்த ஆண்டு மிக முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய சுகாதார துறைசார்ந்த அபிவிருத்திகளை இனங்கண்டு 1௦௦% அவ் வளங்களை பயனுள்ளதாக எவ்வாறு மாற்றுவது தொடர்பான ஒரு அறிக்கையையும் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.