“சுபீட்சமானநோக்கில் விவசாய மறுமலர்ச்சி”எனும் தொனிப் பொருளில் கமத்தொழில் அமைச்சர் அவர்களின் யாழ் மற்றும் கிளிநொச்சிக்கான விஜயம்

“சுபீட்சமான நோக்கில் விவசாய மறுமலர்ச்சி” எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் விவசாய உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் 15.09.2020 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களின் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடல் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டைசார்ந்த தொழில் இராஜாங்க அமைச்சர் கௌரவ டி.பி.ஹேரத், நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு செய்கை மேம்பாடு மற்றும் விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில் நுட்ப இராஜாங்க அமைச்சர் கௌரவ சஷீந்திர ராஜபக்ச, உர உற்பத்தி மற்றும் வழங்கல்கள் இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை இராஜாங்க அமைச்சர் கௌரவ மொஹன் டி சில்வா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சுரேன் ராகவன், வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பீ. எஸ். எம். சார்ள்ஸ், யாழ் மாவட்ட மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்கள், விவசாயப் பணிப்பாளர்கள், விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், கமநல சேவை ஆணையாளர்கள், கமநல சேவைத் திணைக்களத்தைச் சார்ந்த உத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

சின்ன வெங்காயம், வாழை, உழுந்து, நிலக் கடலை ஆகிய பயிர்களிற்குக் காப்புறுதி செய்யப்பட வேண்டும் என்றும் யாழ் மாவட்ட விவசாயிகளின் பல வருடக் கோரிக்கைக்கு இணங்க யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடலில் மேற்குறிப்பிட்ட பயிர்களிற்கு காப்புறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். விவசாயக் கால்வாய்கள் மற்றும் குளங்களின் புனரமைப்பு, உருளைக் கிழங்கிற்கான மானியம், விவசாயக் காணிகள், விவசாயக் காணிகளில் இடம் பெறும் மண் அகழ்வு, குழாய் கிணறு சம்பந்தமாக, நெல் உற்பத்திக்கு நிலையான விலை நிர்ணயம், விவசாயக் கடன்கள், கட்டாக்காலி விலங்குகளால் பயிர்ச்சேதங்கள், பண்ணை விலங்குணவுகளின் உற்பத்தியின் வீழ்ச்சி எழுச்சி,  விவசாய உரங்கள்,  இடைத் தரகர்கள் அற்ற சந்தைப்படுத்தல் மற்றும் சந்தைவாய்ப்புக்கள்,  விவசாயப் போதனாசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு குறிப்பிட்ட பிரச்சினைகளிற்கு உடனடித் தீர்வும் முன்வைக்கப்பட்டது.

கமத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் புத்தூர் விவசாயப் போதனாசிரியர் பிரிவில் அச்செழு கிராமத்தில் திரு.நிறோஜன் எனும் விவசாயியின் தோட்டத்தில், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகம் யாழ்ப்பாணம் மற்றும் பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையம், கிளிநொச்சி ஆகியவற்றினால் இணைந்து முன்னெடுக்கப்படும் திராட்சை முன்மாதிரித் துண்டச் செய்கையினை பார்வையிட்டார்.

விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் எழுதுமட்டுவாள் கிராமத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ரொம்-ஈ- ஜேசி மாமரச் செய்கைத் துண்டம் பார்வையிடப்பட்டது. பிராந்திய விவசாய ஆராய்ச்சி நிலையம், கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட மாண்புமிகு கமத்தொழில் அமைச்சர் அவர்கள் அங்கு ஸ்தாபிக்கப்பட்ட ஆராய்ச்சித் துண்டங்களினைப் பார்வையிட்டதுடன் திராட்சைக்கான முன்மாதிரித் துண்டத்தினையும் பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் விவசாய பிடத்திற்கு விஜயம் மேற்கொண்டு மஞ்சள் அறுவடையினை மேற்கொண்டதுடன் விவசாயத் துறையினை முன்னேற்றுவதற்காக பல்கலைக்கழகம்,மத்திய விவசாயத் திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பிரிவு, விதைகள் மற்றும் நடுகைப்பொருள் விற்பனை மற்றும் அபிவிருத்திப் பிரிவு, மாகாண விவசாயத் திணைக்களத்தின் விரிவாக்கற் பிரிவு என்பன ஒன்றிணைந்து முன்னெடுக்கக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்வொன்று கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது.