முழங்காவிலில் சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாம்பழ மற்றும் வாழைப்பழ அறுவடை வயல்விழா நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் முழங்காவில் விவசாயப் போதனாசிரியர் பிரிவில், சிறந்த விவசாய நடைமுறையின் கீழ் மாமரச் செய்கை மற்றும் வாழைச் செய்கையில் ஈடுபட்டு வருகின்ற திரு.அருணாசலம் பொன்னுத்துரை எனும் விவசாயியின் தோட்டத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முழங்காவில் பகுதி விவசாயப் போதனாசிரியர் தலைமையில் 21.08.2020 ஆம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெற்றது. சிறப்பாக நடைபெற்ற இவ் வயல்விழாவுக்கு விருந்தினர்களாக முழங்காவில் பிரதம வைத்திய அதிகாரி திரு.க.செல்வநாதன் அவர்களும் விவசாய வியாபார ஆலோசகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் இவர்களுடன் முழங்காவில் கமக்கார அமைப்பினர், பிரதான பழமரச் செய்கையாளர்கள், மற்றும் விவசாயிகள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தனர்.
மேற்படி விவசாயிக்கு உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையில் 2017 ஆம் ஆண்டு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் 40 டொம்.ஈ.ஜேசி (TOM EJC) மாமரக்கன்றுகள் வழங்கப்பட்டிருந்தது. அம் மரக்கன்றுகளை சிறப்பாக பராமரித்ததுடன் மேலதிகமாக 20 மரக்கன்றுகளைக் கொள்வனவு செய்து நாட்டியுள்ளார். டொம்.ஈ.ஜேசி மாமரக்கன்றுகளினை செறிவான பயிர்ச்செய்கை முறையின் கீழ் 5 மீற்றர் x 5 மீற்றர் இடைவெளியில் பயிரிட்டுள்ளார். தற்போது உரிய பயிற்றுவித்தல், கத்தரித்தல் செயற்பாட்டின் காரணமாக காய்கள் உருவாகி அறுவடைக்கு தயாராக உள்ளது. காய்களில் ஏற்படும் பழ ஈ தாக்கம், பொறிமுறைக்காயம் என்பவற்றை தவிர்க்கவும் தரமான கனியினைப் பெறவும் ஒவ்வொரு காய்களிற்கும் தனித்தனியே உறையிடப்பட்டிருந்தது. இதனால் தரமான, மஞ்சள் நிறக்கனிகளை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.
அத்துடன் 2019 PSDG திட்டத்தின் ஊடாக 75% மானிய அடிப்படையில் பெறப்பட்ட இழையவளர்ப்பு கப்பல் இன 220 வாழைக்குட்டிகள் 10 அடி x 5 அடி இடைவெளியில் செறிவான முறையில் 1/4 ஏக்கரில் நடுகை செய்யப்பட்டுள்ளது. வாழைக்குட்டிகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு 6 மாதப் பயிராக உள்ளது. இங்கு விசேட அம்சமாக சொட்டு நீர்ப்பாசனம் மூலம் நீர் வழங்கப்படுகின்றது. சாரசரியாக 20 நிமிடங்கள் தொடர்ச்சியாக நீர் விநியோகிக்கப்படுகின்றது. இது Mini Spray வகைக்குரிய சொட்டு நீர்ப்பாசனமாகும். இதனால் அடைப்புகள் ஏற்படுவதும் குறைவு. நாளொன்றிற்கு 32 லீற்றர் நீர் வாழைக்குத் தேவையாகும். அடி மரத்திற்கு துளித்துளியாக நீர் கிடைப்பதால் கப்பல் இன வாழையில் ஏற்படும் பனாமா நோய் பரம்பல் கட்டுப்படுத்தப்படுகின்றது.