கிளிநொச்சி மாவட்டத்தில் குரக்கன் பயிர்ச்செய்கையின் அறுவடை விழாவானது கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் அம்பாள்குளம் விவசாயப்போதனாசிரியர் பிரிவிலுள்ள செல்வாநகர் கிராமத்தில் ம.இராஜகோபால் எனும் பயனாளியின் தோட்டத்தில் 19.08.2020 ஆந் திகதி நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற இவ் அறுவடை வயல் விழாவிற்கு பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் மேலதிக பணிப்பாளர் கலாநிதி.எஸ்.J.அரசகேசரி அவர்களும் மாவட்ட விவசாயப்பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதைகள் நடுகைப் பொருட்கள்), விவசாயக்கல்லூரி அதிபர், உதவிப்பணிப்பாளர்(விதைகள்ஆய்வுகூடம்) மற்றும் விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகளும் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறைந்தளவான நீர் மற்றும் பசளை பாவனையுடனும் குறைவான நோய்த்தாக்கத்துடனும், கூலியாட் செலவுடனும் வெற்றிகரமாக பயிர்செய்யக்கூடிய சிறுதானிய பயிர்களில் ஒன்றான குரக்கன் செய்கையினை ஊக்குவிப்பதற்காக கிளிநொச்சி மாவட்டத்தின் மீண்டுவரும் செலவீனத்தில் 30 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு “ஓளசதா” எனும் புதிய குரக்கன் இனம் இவ்வாண்டு சிறுபோகத்தில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இதே போன்று சௌபாக்கியா எனும் திட்டத்தினூடாகவும் 45 பயனாளிகளுக்கு குரக்கன் விதைகள் வழங்கி வைக்கப்பட்டு தொழில்நுட்ப ஆலோசனைகளும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலமாக வழங்கப்பட்டிருந்தது. அருகி வரும் சிறு தானியப் பயிர்ச்செய்கையினை ஊக்குவிப்பதுடன் உடலிற்கு ஆரோக்கியமான உள்@ர் உணவு உற்பத்தியை ஊக்குவித்தலும் தன்னிறைவடைதலுமே இவ் வயல் விழாவின் நோக்கமாகும்.