வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார் தலைமையிலான குழுவினர் விவசாய நவீன மயமாக்கல் திட்ட அனுசரணையுடன் வவுனியா சன்னாசிப்பரந்தனில் பப்பாசி செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் தோட்டங்களை 24.07.2020 அன்றுபார்வையிட்டனர்.
இப்பிரதேசத்தில் பப்பாசிச் செய்கையானது வைரசு நோய்த்தாக்கத்தின் காரணமாக அண்மைக் காலத்தில் கைவிடப்பட்டது. விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் மூலம் விவசாயிகளிற்கு தலா 320 ரெட்லேடி இன பப்பாசிக் கன்றுகள், 40 நாகபூச்சிடப்பட்ட இரும்பு குழாய்கள்(GI Pipe), 180 m நீளம் 3 m அகலமுடைய பூச்சி உட்புகாவலை இப்பிரதேசத்தைச் சேர்ந்த 16 விவசாயிகளிற்கு வழங்கப்பட்டன. விவசாயிகள் வைரசு நோயை காவும் பூச்சிகாவிகளை தடுப்பதற்காக பூச்சிஉட்புகாவலையினை பயன்படுத்தி 3அ உயரமான வேலியினை அமைத்துள்ளனர் இந்த பூச்சிஉட்புகா வலையானது ½ அடி ஆழத்திற்கு மண்ணினுள் புதைக்கப்பட்டு உறுதியாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது. நீர் தேங்குவதனால் ஏற்படும் பாதிப்பினை தவிர்க்கும் நோக்குடன் பப்பாசிக் கன்றுகளானது உயர் பாத்திகளில் நாட்டப்பட்டுள்ளது. அத்துடன் மேலதிகமான நீரினை வடிந்தோடச் செய்யக்கூடிய வகையில் பொருத்தமான வடிகாலமைப்பினை ஏற்படுத்தியுள்ளனர்.