KOICA – UNICEF அனுசரணையுடன் அமைக்கப்பட்ட கிளிநொச்சி பாடசாலைகளின் கட்டட கையளிப்பு நிகழ்வு

கொரியா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யுனிசெப்பினால் அமுல்ப்படுத்தப்படும் KOICA – UNICEF நிகழ்ச்சித் திட்டமானது ரூபா 270 மில்லியன் ஒதுக்கீட்டில் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு வடமாகாண கௌரவ ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் கல்வி அமைச்சின் வழிகாட்டலின்கீழ் 27 அவசியமான கருத்திட்டங்களை முன்வைத்து செயற்படுத்தப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்ட பாடசாலை கட்டடங்களின் கையளிப்பு நிகழ்வு 26.07.2022 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர், கொரியா தூதுவர், KOICA வதிவிட பிரதிநிதிகள் மற்றும் அணியினர், யுனிசெப் வதிவிட பிரதிநிதிகள் மற்றும் அணியினர், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வட மாகாண கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளரகள் மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

முதலில் கிளி/இயக்கச்சி தமிழ் கலவன் பாடசாலைக் கட்டடம் காலை 8.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் வரவேற்புரை பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் இசை வாத்தியத்துடன் வரவேற்பு நிகழ்வும், பிரதம அதிதிகளால்; கொடியேற்றல் நிகழ்வும், வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் UNICEF வதிவிட பிரதிநிதிகளால் பெயர்பலகை திரை நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வும், புதிய வகுப்பறையினை திறந்து வைக்கும் வைபவமும் ஒருங்கே இடம் பெற்றன. தொடர்ந்து அதிதிகளின் உரைகள் மற்றும் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.


கிளி/முக்கொம்பன் மகாவித்தியாலய கட்டடமானது காலை 11.30 மணிக்கு கௌரவ ஆளுநர் அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டட கையளிப்பு நிகழ்வில் வரவேற்புரை பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்டதுடன் தொடர்ச்சியாக மாணவர்களின் இசை வாத்தியத்துடனான வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது. தொடர்ந்து பிரதம அதிதிகளால் கொடியேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. இதனை தொடர்ந்து வடமாகாண ஆளுநர் மற்றும் கொரிய தூதுவர் அவர்களால் பெயர்பலகை திரை நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வும், புதிய வகுப்பறையினை திறந்து வைக்கும் வைபவமும் ஒருங்கே இடம் பெற்றன.

இந்நிகழ்வில் கொரியா துணைத்தூதுவர் கருத்துத் தெரிவிக்கையில் “KOICA ஊடாக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு அவை இலங்கையின் கல்வி ரீதியில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன” எனக் கூறினார். இந்நிகழ்வுகளில் உரையாற்றிய பிரதம செயலாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “மத்திய அரசாங்கத்தினதும் வடமாகாண சபையினதும் மற்றும் ஏனைய நிதி வழங்குனர் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் நிதி உதவியுடனும் வட மாகாணத்தில் ஒவ்வொரு துறையிலும் அபிவிருத்தி செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. கல்வித்துறையின் அறிவு மட்டத்தை உயர்த்துவதற்காக வழமையாக கிடைக்கின்ற நிதிக்கு மேலதிகமாக கொரிய அரசாங்கத்தின் சர்வதேச உதவிகள் கல்வித்துறைக்கு கிடைத்துள்ளதாகவும், மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து மாணவர்களும் உயர் கல்வியின் இலக்கை அடைந்து கொள்வதே சர்வதேச KOICA நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்காகும். இப் பாடசாலை கட்டடங்களின் கையளிப்பு நிகழ்வானது 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ரூபா 270 மில்லியன் ஒதுக்கீட்டில் 27 அவசியமான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக 13 பாடசாலைகளுக்கு மட்டுமே கிளிநொச்சி மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாணவர்களின் உடனடி கல்வித் தேவைகளை இனங்கண்டு KOICA – UNICEF திட்டம் செயற்படுகின்றது” எனக் குறிப்பிட்ட அவர் மாணவர்களின் எதிர்கால வாழ்வு வெற்றியடைய கேட்டுக் கொண்டதுடன், கொரியா தூதுவர், KOICA வதிவிட பிரதிநிதிகள்; மற்றும் யுனிசெப் இலங்கை வதிவிட பிரதிநிதிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வுகளில் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையில் “கிளி;நொச்சி மாவட்டத்தின் கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கு அரசாங்கம் செயற்படுகின்றது எனவும் அதற்காக KOICA – UNICEF திட்டத்தின் தொடர்ச்சியான உதவிக்கு நன்றி தெரிவித்ததடன் மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த நிகழ்ச்சித் திட்டம் உதவும்” எனவும் கூறினார்.